காரமடையில் என்ஜினீயர் வீட்டில் 50 பவுன் நகை-ரூ.4 லட்சம் கொள்ளை
- ஜவுளி எடுத்து மாலையில் 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர்.
- வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
மேட்டுப்பாளையம்:
கோவை மாவட்டம் காரமடை காமராஜர் நகரை சேர்ந்தவர் யுவராஜ்(வயது41).
இவர் சிவில் என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி தீபபிரியா.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு யுவராஜ் குடும்பத்தினருக்கு ஜவுளி எடுக்க முடிவு செய்தார்.
இதையடுத்து நேற்று யுவராஜ் தனது மனைவி தீப பிரியாவுடன் ஜவுளி எடுப்பதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.
ஜவுளி எடுத்து மாலையில் 2 பேரும் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.
இதைபார்த்து பதறிபோன யுவராஜ் வீட்டிற்குள் சென்று பார்த்தார்.
அப்போது வீட்டின் அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. மேலும் பொருட்களும் ஆங்காங்கே சிதறி கிடந்தன. உடனடியாக யுவராஜ் பீரோவில் நகை,பணம் இருக்கிறதா? என பார்த்தார்.
அப்போது பீரோவில் வைத்திருந்த 50 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் ரொக்கம் கொள்ளை போய் இருந்தது.
இவர்கள் கடைக்கு சென்றதை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் கதவை உடைத்து பொருட்களை திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து யுவராஜ் காரமடை போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் காரமடை இன்ஸ்பெக்டர் குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முனுசாமி, சுல்தான் இப்ராகிம், தனிப்பிரிவு காவலர் பிரவீன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
பின்னர் கொள்ளை நடந்த வீடு முழுவதும் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினர்.
மேலும் தடயவியல் நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு ஏதாவது கைரேகைகள் பதிவாகி உள்ளதா? என ஆய்வு மேற்கொண்டனர். மோப்பநாயும் வரவழைக்கப்பட்டது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
தொடர்ந்து போலீசார் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமிராக்கள் மற்றும் அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டிருக்கும் கேமிராக்களையும் ஆய்வு செய்து வருகின்றனர்.
இந்த சம்பவம் குறித்து காரமடை போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.
என்ஜினீயர் வீட்டில் 50 பவுன் நகை மற்றும் ரூ.4 லட்சம் கொள்ளை போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.