வானூர் அருகே அரசு பஸ் தடுப்புகட்டையில் மோதி விபத்து: பயணிகள் அலறல்
- ஆரோவில் அருகே பிள்ளையார்சாவடி பகுதியில் பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் வேகமாக மோதியது.
- விபத்தில் பஸ் டிரைவர் உள்பட பயணிகள் அனைவரும் காயம் அடைந்தனர்.
வானூர்:
சென்னையில் இருந்து நேற்று இரவு சுமார் 20 பயணிகளுடன் கும்பகோணம் நோக்கி அரசு பஸ் ஒன்று வந்தது. இந்த பஸ்சை அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் பகுதியை சேர்ந்த ராஜராஜன் (வயது 46) என்பவர் ஓட்டி வந்தார்.
இன்று காலை புதுச்சேரி-சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் வந்தது. ஆரோவில் அருகே பிள்ளையார்சாவடி பகுதியில் பஸ் வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை நடுவில் இருந்த தடுப்பு கட்டையில் வேகமாக மோதியது. உடனே பஸ்சில் இருந்த பயணிகள் அலறினர்.
இந்த விபத்தில் பஸ் டிரைவர் உள்பட பயணிகள் அனைவரும் காயம் அடைந்தனர். பஸ்சின் முன்பகுதி பயங்கர சேதம் அடைந்தது. இதை அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் பார்த்து அதிர்ச்சி அடைந்து கோட்டக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவல் அறிந்த கோட்டக்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விபத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.