கிருஷ்ணகிரி அருகே அரிவாள்மனையால் மனைவி கழுத்தை அறுத்து கொன்ற பெயிண்டர்
- சுந்தருக்கும், லட்சுமிக்கும் இடையே நேற்று இரவு தகராறு ஏற்பட்டுள்ளது.
- குடிபோதையில் இருந்த சுந்தர் ஆத்திரத்தில் அருகே கிடந்த அரிவாள்மனையை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் பழைய கோட்டை பகுதியை சேர்ந்தவர் சுந்தர். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார். இவரது முதல் மனைவி கலா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு கணவன், மனைவி இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.
இதனால் கோபித்து கொண்டு கலா தனது 2 குழந்தைகளையும் அழைத்துக்கொண்டு பெங்களூருவில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதையடுத்து லட்சுமி என்ற பெண்ணை சுந்தர் 2-வதாக திருமணம் செய்துகொண்டுள்ளார். இவர்களுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.
நேற்று இரவு சுந்தருக்கும், லட்சுமிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது குடிபோதையில் இருந்த சுந்தர் ஆத்திரத்தில் அருகே கிடந்த அரிவாள்மனையை எடுத்து லட்சுமியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து அவர் தப்பி ஓடிவிட்டார்.
இதில் ரத்தவெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே துடி துடித்து லட்சுமி பரிதாபமாக உயிரிழந்தார்.
இன்று காலை லட்சுமி வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து பார்த்துள்ளனர். அப்போது கழுத்து அறுக்கப்பட்டு லட்சுமி பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இது குறித்து கிருஷ்ணகிரி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து லட்சுமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொடூர சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குடும்ப தகராறில் கணவன் மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.