முதல் முதலாக பெரியாரை எதிர்த்து அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா- சீமான்
- வாக்குக்கு பணம் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றனர்.
- நாங்கள் பதவிக்கானவர்கள் அல்ல. உங்கள் உதவிக்கானவர்கள்.
ஈரோடு:
ஈரோடு கிழக்குத் தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து இறுதிக்கட்ட பிரசாரத்தில் அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈடுபட்டார். கிருஷ்ணா தியேட்டர் பகுதியில் நடந்த பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
முதன்முதலாக பெரியாரை எதிர்த்து அரசியல் இயக்கம் கண்டவர் அண்ணா. கடவுள் இல்லை என்ற கொள்கையை கைவிட்டு, ஒன்றே குலம், ஒருவனே தேவன் என்று சொன்னவர். காங்கிரசார் வாக்கிற்கு பணம் கொடுத்த போது, தங்கத்தை யாராவது தவிட்டிற்கு விற்பார்களா என்று கேட்டவர் அண்ணா.
அவருடைய பேரைச் சொல்லி கட்சி நடத்துபவர்கள், வாக்கினை விலைக்கு வாங்கிக் கொண்டு இருக்கின்றனர். அவதூறு, அசிங்கம், பழிவாங்கல், அடக்குமுறை இல்லாத நல்லாட்சி கொடுத்தவர் அண்ணா.
அவர் அரசியல் தளத்திற்கு வந்த பிறகுதான், தமிழர்களின் இலக்கியம், வரலாறு அரசியல் மேடைகளில் பேசப்பட்டது. பணத்தை முன் நிறுத்தி அவர்கள் நிற்கும் போது நாங்கள் இனத்தை முன் நிறுத்தி நிற்கிறோம்.
நாங்கள் பதவிக்கானவர்கள் அல்ல. உங்கள் உதவிக்கானவர்கள். மக்களை வைத்து பிழைக்க நாங்கள் கட்சி ஆரம்பிக்கவில்லை. மக்களுக்கு உழைக்க ஆரம்பித்தோம். தொடர்ந்து தோல்வி வந்தாலும், உங்களை நம்பி நிற்கிறோம்.
ஆதிக்குடி மக்களுக்கு சாதிச்சான்று கிடைக்க வில்லை. சமூகநீதி பேசிய திராவிடர்கள் எங்கே போனார்கள்? சாதி வாரி கணக்கெடுப்பு எடுத்து இடப்பகிர்வை கொடுக்க இவர்கள் மறுக்கின்றனர்.
சாதி வாரிக்கணக்கெடுப்பு எடுத்தால் நரிகளின் வேஷம் கலைந்து விடும். இதை யெல்லாம் தெரிந்தும் வாக்கினை விலைக்கு விற்கலாமா? இங்கு அரசு வழங்கும் கல்வி, மருத்துவம் எதுவும் தரமில்லை.
இந்த அரசாங்கம் மடிக்கணினி, மிக்சி, கிரைண்டர் இலவசமாக கொடுத்து விட்டு தண்ணீரை விலைக்கு விற்கிறது. சொந்தமாக ஒரு விமானம் கூட இல்லாத நாட்டிற்கு எதற்கு 5000 ஏக்கரில் விமான நிலையம் அமைக்க வேண்டும். இத்தனை நாட்களாக நீங்கள் தலைவர்களை தேர்வு செய்யவில்லை. தரகர்களைத் தேர்வு செய்து வந்துள்ளீர்கள்.
சாதி, மதம், சாராயம், திரைக்கவர்ச்சி, பணம் ஆகியவற்றைக் கொண்டு வாக்காளர்களை மயக்குகின்றனர். முதல்வர், துணை முதல்வர் உங்களை வந்து பார்க்கவில்லை. அவ்வளவுதான் உங்கள் மதிப்பு. உங்களுக்காக பேச எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இதற்கு முன்பு நடந்த இரு தேர்தல்களிலும், எந்த கூட்டணியும் இல்லாது, மக்களை நம்பி போட்டியிட்டோம்.
மதுக்கடைகளுக்கு விடுமுறை என்றால் முன் கூட்டியே மதுவை வாங்கி வைக்க சிந்தனை செய்யும் நீங்கள், எதிர்கால சந்ததிக்கு குடிநீர், காற்று, கல்வி, உணவு போன்றவை இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.
தொடர்ந்து பலமுறை இந்த கட்சிகளுக்கு வாக்கு செலுத்தி விட்டீர்கள். வாக்கிற்கு பணம் கொடுத்தால் போதும் என்பதுதான் அவர்கள் நம்மீது வைத்திருக்கும் மதிப்பு.
ஆசிரியர்களுக்கு சம்பளம் தர மத்திய அரசு நிதி தரவில்லை. மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை யில் தமிழ்நாடு என்ற பெயரே இல்லை. இதை சொல்வதற்கு 40 எம்பிக்கள் எதற்காக? அதிக வருவாய் ஈட்டித்தரும் மாநிலங்களில் இரண்டாவது இடத்தில் தமிழகம் உள்ளது.
எனது வருவாயைப் பெற்று, எனக்கு நிதியைத்தர மறுக்கிறாய் என இந்த ஆட்சியாளர்கள் வரிகொடா இயக்கத்தை நடத்த முடியாதா? இவர்கள் அந்த முடிவை எடுக்க மாட்டார்கள்.
ஆளுநர் நியமனம் செய்யும் துணைவேந்தர்க ளுக்கு ஆளுநர் ஊதியம் வழங்கட்டும். தமிழக அரசு நியமனம் செய்யும் துணை வேந்தர்களுக்கு மட்டும் தான் நாங்கள் சம்பளம் கொடுப்போம் என்று தமிழக அரசு சொல்ல முடியாதா? இவர்கள் கரை படிந்த கைகளுக்கு சொந்தக்காரர்கள் என்பதால் இவர்கள் அதை செய்ய மாட்டார்கள்.
நாம் தமிழர் கட்சியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக, அதிமுக, பாஜகவினரிடம் சென்று, 'நீங்கள் வாக்கு செலுத்தி சீமானை வளரவிட்டீர்கள் என்றால், அடுத்து உங்களுக்கு போட்டியாக வந்து விடுவார்' என்று பிரச்சாரம் செய்கின்றனர்.
பெரியாரை விமர்சித்த சீமானுக்கு அதிக வாக்கு விழக்கூடாது என்பதால் நோட்டாவிற்கு போடுங்கள் என்று பிரசாரம் செய்கின்றனர்.
பெரியார் என்ன செய்தார் என்று பேச ஒருவருக்கும் தைரியம் இல்லை. காசு கொடுத்து வாக்கினை வாங்குவதுதான் திராவிட மாடல். இப்போது நோட்டாவுக்கு வாக்கு செலுத்துங்கள் என்று சொல்லும் திமுக, 234 தொகுதிகளில் நான் போட்டியிடும் போதும் நோட்டாவுக்கு வாக்களிக்குமாறு சொல்வார்களா?
2026 பொதுத்தேர்தலில் நான் தனித்து போட்டியிடுவேன். ஆண்கள், பெண்களுக்கு நான் சம வாய்ப்பு கொடுப்பேன். உதயசூரியனுக்கு வாக்களித்தால் கருணாநிதி வீட்டில் வெளிச்சம் வரும். உன் வீட்டுக்கு வெளிச்சம் வராது. பழைய சின்னங்களை தூக்கி வீசி நாம் தமிழரை ஆதரியுங்கள். நாட்டை நாசமாக்கியவர்கள் மீது, உங்கள் கோபத்தை வெளிப்படுத்த, எங்களுக்கு வாக்கு செலுத்தி வெளிப்படுத்துங்கள்.
வாக்கு காசு கொடுக்கும் இடத்தில் தான் ஊழல், லஞ்சத்திற்கு விதை ஊன்றப்படுகிறது. ஒரு முதலாளி 100 கோடி ரூபாய் முதலீடு செய்வது மக்கள் சேவை செய்ய வருவார்களா?
நாங்கள் தெரு தெருவாக வந்து மக்களை சந்திக்கிறோம். ஆனால், ஆட்சியாளர்கள் ஏன் வந்து மக்களைச் சந்திக்கவில்லை. ஆட்சியின் சாதனையை சொல்ல ஒன்றுமில்லை. மக்கள் கேள்வி கேட்பார்கள் என்ற பயம் இருக்கிறது.
வாக்குக்கு பணம் கொடுத்தால் போதும் என்று நினைக்கின்றனர். பிரச்சாரத்திற்கு வராமல் வெற்றி பெறுவோம் என்று திமிருடன் இருக்கும் தி.மு.க. வை ஒழிக்க எங்களுக்கு வாக்களியுங்கள்.
குடும்பத்தலைவிக்கு ஆயிரம் உதவித்தொகை கொடுத்து, அதனை டாஸ்மாக் மூலம் திரும்ப வாங்கிக் கொள்கின்றனர். மகளிர் உரிமைத் தொகைக்கு கருணாநிதி மகளிர் உரிமைத் தொகை என்று பெயர் வைக்கிறார்கள். அவர்கள் வீட்டில் இருந்து இதற்கு பணம் கொடுக்கின்றனரா?
மகளிரை, மாணவியரை கையேந்த வைக்கத்தான் இவர்கள் திட்டம் போடுகி ன்றனர். பிச்சை எடுக்கும் திட்டத்திற்கு மட்டும் தமிழ் மகள் என்று ஏன் பெயர் வைக்கின்றீர்கள். திராவிட மகள் என்று வைக்க வேண்டியது தானே. ஒருநாள் திராவிட மாடலை, ஈயம், பித்தளை, பேரிச்சம் பழத்திற்கு போடும் நிலை யை வர வைப்பேன்.
இந்த தேர்தல் கட்சி களுக்கான போட்டி யிட்டிலை. கருத்தியலுக்கான போட்டி. திராவிடக் கோட்பாட்டிற்கும், தமிழ் தேசிய கருத்துகள் மோதுகின்றன.
உன் இனத்தை, வளத்தை பாதுகாக்க, தரமான கல்வி, மருத்துவம் கிடைக்க எங்களுக்கு வாய்ப்பு தாருங்கள். ஈரோடு கிழக்கில் நாம் தமிழருக்கு கிடைக்கும் வெற்றி மாற்றத்திற்கான, நல்ல அரசியலுக்கான மகத்தான தொடக்கமாக இருக்கட்டும். ஒற்றை விரலால் ஒரு புரட்சியை ஏற்படுத்துங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.