உள்ளூர் செய்திகள்
மெயினருவியில் மிதமான அளவில் விழும் தண்ணீரை படத்தில் காணலாம்.

நெல்லை, தென்காசி அணைப்பகுதியில் சாரல் மழை- குற்றாலம் மெயின் அருவிக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2022-06-25 10:20 IST   |   Update On 2022-06-25 10:20:00 IST
  • அடவிநயினார் அணைப்பகுதியில் மட்டும் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது.
  • தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்யும் நிலையில் இந்த முறை தாமதம் ஏற்பட்டுள்ளது.

தென்காசி:

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை தொடங்கி விட்ட நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள நெல்லை, தென்காசி மாவட்டங்களில் இதுவரை குறிப்பிடத்தக்க அளவு மழை பெய்யவில்லை.

வழக்கமாக தென்மாவட்டங்களில் சாரல் மழை அதிகளவில் பெய்யும் நிலையில் இந்த முறை இதுவரையிலும் மழை பெய்யாததால் பொதுமக்களும், விவசாயிகளும் பருவமழையை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

நெல்லை மாவட்டத்தில் 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையில் தற்போது 53.80 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து 606 கனஅடி நீர் பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 275.32 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. சேர்வலாறு அணையில் 64.37 அடி நீர் இருப்பு உள்ளது. அங்கு நேற்று 2 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

தென்காசி மாவட்டத்தின் மேற்கு தொடர்ச்சி மழையின் உட்பகுதியில் பெய்த மிதமான மழையின் காரணமாக நேற்று காலை முதல் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சற்று கூடுதலாக தண்ணீர் வர தொடங்கியது.

குறிப்பாக மெயினருவியில் கடந்த சில நாட்களாக பாறைகள் மட்டுமே தெரிந்த நிலையில் தற்பொழுது தண்ணீர் வரத்து சற்று அதிகரித்துள்ளது. அதேநேரத்தில் சுற்றுலா பயணிகளின் வருகை குறைவாகவே காணப்பட்டது.

அடவிநயினார் அணைப்பகுதியில் மட்டும் கடந்த சில நாட்களாக லேசான சாரல் மழை பெய்து வருகிறது. நேற்று மாவட்டம் முழுவதும் பெரும்பாலான இடங்களில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

வழக்கமாக தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை அதிகளவில் பெய்யும் நிலையில் இந்த முறை தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும்பாலான குளங்கள், ஓடைகளில் நீர் இருப்பு வெகுவாக சரிந்துள்ளது.

Tags:    

Similar News