தமிழ்நாட்டில் புற்றுநோயால் 2½ லட்சம் பேர் பாதிப்பு
- புற்றுநோயை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
- ரம்பரை பரம்பரையாக ஏற்படும் மரபணு மாற்றத்தால் 10-15 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
சென்னை:
உலகம் முழுவதும் இன்று புற்றுநோய் தினம் அனுசரிக்கப்படுகிறது. புற்றுநோய் என்ற வார்த்தையை உச்சரிக்கும்போதே மனதுக்குள் ஓர் இனம் புரியாத பயம் பலருக்கும் உண்டாவது வழக்கம். புற்றுநோய் வந்தாலே மனித உயிரை மாய்த்துவிடும் என்பது முழு உண்மையில்லை.
தமிழ்நாட்டில் ஏறத்தாழ 2 லட்சத்து 40 ஆயிரம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் கடந்த ஆண்டில் மட்டும் (2024) மார்பக புற்றுநோயால் 13 ஆயிரத்து 600 பேரும், கர்ப்பப்பை புற்றுநோயால் 7 ஆயிரத்து 900 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளனர். மேலும், ஆண்களில் நாக்கு மற்றும் வாய்ப்புற புற்றுநோயால் 5 ஆயிரத்து 500 பேரும், நுரையீரல் புற்றுநோயால் 3 ஆயிரத்து 300 பேரும் என மொத்தம் 96 ஆயிரத்து 500 பேர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த பாதிப்பு கடந்த 2023-ம் ஆண்டைவிட 4 ஆயிரம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து அதிகரித்து வரும் புற்றுநோய் பாதிப்பை குறைப்பதற்காக அரசு சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. புற்றுநோயை பொறுத்தவரை ஆண்களைவிட பெண்களே அதிகம் பாதிக்கப்பட்டு உள்ளனர். புகையிலை, குட்கா உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்துபவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக ஓமந்தூரார் அரசு பன்நோக்கு ஆஸ்பத்திரி புற்றுநோய் அறுவை சிகிச்சை துறை தலைவர் டாக்டர் சுரேஷ் கூறியதாவது:-
ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு முன்பு வரை கர்ப்பப்பை புற்றுநோயால் அதிக பேர் பாதிக்கப்பட்டனர். ஆனால், தற்போது மார்பக புற்றுநோயால் தான் அதிக பேர் பாதிக்கப்படுகின்றனர். பரம்பரை பரம்பரையாக ஏற்படும் மரபணு மாற்றத்தால் 10-15 சதவீதம் பேர் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். ஒரே குடும்பத்தில் 2-க்கும் மேற்பட்டோர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும்.
அப்போது அவர்களின் உடம்பில் 'பிராக்கா' என்ற ஜீன் பாசிட்டிவாக இருந்தால் அவர்களின் வாழ்நாளில் 60 முதல் 80 சதவீதம் புற்றுநோய் பாதிப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளது. எனவே, 'பிராக்கா' ஜீன் பாசிட்டிவாக இருந்தால் அதற்காக முன்கூட்டியே சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும். அவ்வாறு சிகிச்சை பெற்றால் புற்றுநோய் பாதிப்பில் இருந்து தற்காத்து கொள்ளலாம். மேலும், குட்கா, புகையிலை பயன்படுத்துபவர்கள், கொழுப்பு அதிகரிப்பு, கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டவர்களுக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.