அ.தி.மு.க. பொதுக்குழுவில் பொருளாளர் யார்? என்பது முடிவு செய்யப்படும்- கே.பி.முனுசாமி
- தற்போதைய தி.மு.க. அரசை எதிர்க்க ஒற்றை தலைமை இருந்தால் தான் அ.தி.மு.க. வலுவான எதிர்கட்சியாக செயல்படும்.
- பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் பொருளாளர் யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட அ.தி.மு.க. அலுவலகத்தில் கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எம்.எல்.ஏ. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலில் இரட்டை இலை சின்னத்தை ஒதுக்குவதற்கு கையெழுத்திடுவது தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சி தலைவரும், இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு கடிதம் எழுதி உள்ளார்.
பி.பார்மில் கையெழுத்திடுவது தொடர்பாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். தற்போது உள்ள சூழ்நிலையில் எந்த கையெழுத்தையும் போடக்கூடிய தார்மீக பொறுப்பை ஓ.பன்னீர்செல்வம் இழந்துவிட்டார்.
காரணம் ஒரு கட்சியின் தலைமை பொறுப்பில் இருந்து கொண்டு பொதுக்குழு, செயற்குழு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்ட நிலையில் அந்த கூட்டத்திற்கு எதிராக செயல்படக்கூடாது.
குறிப்பாக அந்த கூட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் 23 தீர்மானங்களுக்கு மேல் வேறு எதையும் விவாதிக்க கூடாது என்றும் காவல்துறையையும், நீதிமன்றத்தையும் அவர் அணுகியது, கட்சி கட்டுபாட்டை மீறிய செயல்.
அந்த கூட்டத்தில் கலந்து கொண்டு என்ன தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது என்பதை கவனித்து ஆலோசனை வழங்க வேண்டும். எதிராக செயல்படக்கூடாது. கட்சியின் பொதுக்குழு அதே நாளில் திட்டமிட்டப்படி நடைபெறும்.
கட்சியில் உள்ள 75 மாவட்ட செயலாளர்களில் 70 பேரும், 66 எம்.எல்.ஏ.க்களில் ஓ. பன்னீர் செல்வம், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகிய 3 பேர் தவிர 63 பேரும், தலைமை கழக நிர்வாகிகளில் 74-ல் 70 பேரும், பொதுக்குழு உறுப்பினர்களில் 2685 பேரில் 2582 பேர் உள்பட 99 சதவீதம் பேர் ஒற்றை தலைமையை ஆதரிக்கிறார்கள்.
எதிர்கட்சியாக இருந்து கொண்டு ஆளுங்கட்சிக்கு ஆதரவாக ஓ.பன்னீர்செல்வம் செயல்படுகிறார். தி.மு.க.வை பரமவிரோதி என்று ஜெயலலிதா கூறினார்.
ஆனால் பன்னீர்செல்வத்தின் தற்போதைய செயல்பாடுகள் திருப்தியாக இல்லை. தமிழகத்தில் தி.மு.க., அ.தி.மு.க. மட்டுமே வலுவான கட்சிகள்.
தற்போதைய தி.மு.க. அரசை எதிர்க்க ஒற்றை தலைமை இருந்தால் தான் அ.தி.மு.க. வலுவான எதிர்கட்சியாக செயல்படும்.
பொதுக்குழு கூட்டத்தின் போது கட்சியின் பொருளாளர் யார்? என்பது குறித்து முடிவு செய்யப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.