திருச்சியில் அடுத்த ஆண்டு பல்-ஆயுர்வேத மருத்துவக்கல்லூரி அமைக்க அறிவிப்பு வெளியாகும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
- தமிழகத்தில், 7,000 அறுவை சிகிச்சைகள், 2,500 வரை பிரசவ அறுவை சிகிச்சை என 9,000 முதல், 9,500 அறுவை சிகிச்சைகள் வரை நடைபெறுகின்றன.
- திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு அவசர சிகிச்சை படுக்கைள் அமைக்கப்பட்டுள்ளது.
திருச்சி:
திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் உணர்வு ஒருங்கிணைப்பு மற்றும் சிகிச்சை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இதனை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன். ஆகியோர் இன்று திறந்து வைத்தனர்.
மேலும், 32 படுக்கைகளுடன் கூடிய இ.சி.ஆர்.பி. தீவிர சிகிச்சை பகுதியையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இதேபோல் ரூ.25 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சலவை எந்திரத்தை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தனர்.
அறுவை சிகிச்சைகளை டிஜிட்டல் முறையில் சரி பார்க்கும் தொழில்நுட்பத்தை தமிழ்நாடு முழுவதும் அமல்படுத்தும் வகையில் தொடங்கி வைத்தனர்.
விழாவில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-
அமைச்சர் மா.சுப்ரமணியன், காலையில் ஜாக்கிங் செல்லும் போது, கல்லணை அருகே உத்தமர் சீலி கிராமத்தில் வீடு, வீடாக சென்று 'மக்களை தேடி மருத்துவம்' வந்து சேர்ந்ததா? என்று ஆய்வு செய்திருக்கிறார். தனது துறையில் மிகச் சிறப்பாக செயல்படுகிறார். திருச்சிக்கு இரண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கொடுத்துள்ளார். திருச்சிக்கு அரசு பல் மருத்துவமனை ஒன்று வேண்டும். அதை, நிதி நிழல் அறிக்கையில் மட்டும் நீங்கள் (அமைச்சர்) சேருங்கள். நிதியை நான் முதல்வரிடம் கேட்டுப்பெற்றுக்கொள்கிறேன் என்றார்.
இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
சென்னையை சேர்ந்த கால்பந்து வீராங்கனை பிரியா மரணத்திற்கு காரணம், இரு மருத்துவர்கள் என்று அறிக்கை வந்தவுடன் இருவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டதுடன், துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 540 அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு கையேடு வழங்கப்பட்டுள்ளது. அறுவை சிசிச்சை அறை முன்பு, 'செக் லிஸ்ட் போர்டுகளை' வைத்துள்ளோம். இதன் மூலம் மருத்துவத் தவறுகள் குறையும்.
விரைவில், 1,649 அறுவை சிகிச்சை அரங்கு முன்பு செக் லிஸ்ட் போர்டு வைக்கப்படும். இதுபோன்ற ஏற்பாடு இந்தியாவில் இதுவே முதல்முறை. தமிழகத்தில், 7,000 அறுவை சிகிச்சைகள், 2,500 வரை பிரசவ அறுவை சிகிச்சை என 9,000 முதல், 9,500 அறுவை சிகிச்சைகள் வரை நடைபெறுகின்றன. திருச்சி அரசு மருத்துவமனையில் தனியார் மருத்துவமனையை மிஞ்சும் அளவுக்கு அவசர சிகிச்சை படுக்கைள் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும் தற்போது ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் குழந்தைகளுக்கான தொடு உணர்வு சிகிச்சை பூங்கா தொடங்கிவைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் காது கேட்கும் திறனற்ற 88 குழந்தைகள் பயன்பெறுவார்கள்.
திருச்சியில் அரசு பல் மருத்துவமனை நிதி நிழல் அறிக்கையில் முதல்வரின் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும். அடுத்த ஆண்டு திருச்சியில் ஆயுர்வேத மருத்துவக்கல்லூரியும் முதல்வரின் ஆலோசனை பெற்று அறிவிக்கப்படும்.
தமிழகத்தில் புதிதாக 708 நகர்நல வாழ்வு மையம் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதில் நமது அமைச்சர் கே.என்.நேருவின் முயற்சியால் திருச்சியில் மட்டும் 36 மையங்கள் அமைய இருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.