உள்ளூர் செய்திகள்

72 தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் பட்டியல் தயார்: அடுத்த மாதம் 9-ந்தேதி பொதுக்குழு கூடுகிறது

Published On 2022-09-28 05:48 GMT   |   Update On 2022-09-28 05:48 GMT
  • தற்போது மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கட்சித் தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு உள்ளது.
  • இன்று மாலைக்குள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட செயலாளர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிகிறது.

சென்னை:

தி.மு.க. உள்கட்சி தேர்தலில் கிளை கழகம், பேரூர் கழகம், நகரம், ஒன்றியம், வட்டம் பகுதி, மாநகர செயலாளர் பதவிகள் வரை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டனர்.

இப்போது மாவட்ட கழக செயலாளர்களுக்கான தேர்தல் நடந்து வருகிறது. தி.மு.க.வில் அமைப்பு ரீதியாக 72 மாவட்ட செயலாளர்கள் இருக்கிறார்கள். இந்த பதவிகளுக்கு போட்டியிட கடந்த வாரம் 4 நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.

இதில் 45 மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களுக்கு தற்போதைய மாவட்டச் செயலாளர்களை எதிர்த்து எதிர் கோஷ்டியினர் வேட்பு மனுதாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுக்கள் மீது கடந்த 2 நாட்களாக அண்ணா அறிவாலயத்தில் பரிசீலனை நடந்து வந்தது. இதில் சில மனுக்களுக்கு முன்மொழிய மெஜாரிட்டி நிர்வாகிகள் இல்லாத காரணத்தால் தள்ளுபடி செய்யப்பட்டது.

மேலும் சில மாவட்டங்களில் எதிர்த்து போட்டியிட்டவர்களை அழைத்து சமரசம் பேசியதன் காரணமாக அவர்கள் மனுக்களை வாபஸ் பெற்றனர்.

அதன் அடிப்படையில் இப்போது 72 மாவட்டங்களுக்கும் தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இதில் சென்னை உள்பட 66 மாவட்டங்களுக்கு ஏற்கனவே இருந்த மாவட்டச் செயலாளர்கள் அப்படியே மீண்டும் நியமிக்கப்பட்டு உள்ளனர். 6 மாவட்டங்களுக்கு மட்டும் மாவட்டச் செயலாளர்கள் மாற்றப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி கோவை தெற்கு மாவட்டத்திற்கு தளபதி முருகேசன், கோவை வடக்கு மாவட்டத்திற்கு ராமச்சந்திரனுக்கு பதிலாக ரவி அண்ணாதுரை நியமிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நாமக்கல் மேற்கு மாவட்ட செயலாளராக மூர்த்திக்கு பதில் செந்தில் நியமிக்கப்பட்டுள்ளார். தர்மபுரி மேற்கு மாவட்டத்தில் இன்ப சேகரனுக்கு பதில் பழனியப்பன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் அ.தி.மு.க.வில் முன்னாள் அமைச்சராக இருந்தவர். அ.ம.மு.க.வுக்கு சென்று அங்கிருந்து தி.மு.க.வுக்கு வந்தவர்.

திருவள்ளூர் மேற்கு மாவட்டத்தில் பூபதிக்கு பதில் சந்திரன் என்பவர் நியமிக்கப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட செயலாளராக இருந்த செங்குட்டுவனுக்கு பதில் பர்கூர் மதியழகனுக்கு மாவட்டச் செயலாளர் பதவி வழங்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் பதவிக்கு கடும் போட்டி நிலவியது. அங்குள்ள எம்.பி. மாவட்ட செயலாளர் பதவியை கேட்டதால் இழுபறியாக இருந்தது. இன்று மாலைக்குள் இதில் முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று அறிவாலயத்தில் தகவல் தெரிவித்தனர்.

தற்போது மாவட்டச் செயலாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டு கட்சித் தலைவரான முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒப்புதலுக்கு வைக்கப்பட்டு உள்ளது.

இன்று மாலைக்குள் அவர் மாவட்ட செயலாளர் பட்டியலுக்கு ஒப்புதல் வழங்கி அறிவிப்பு வெளியிடுவார் என்று தெரிகிறது.

இதன் பிறகு இன்னும் ஓரிரு நாளில் தி.மு.க. தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு வெளியாகும்.

இதில் மீண்டும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தி.மு.க. தலைவர் பதவிக்கு போட்டியிடுவார். இதே போல் அமைச்சர் துரைமுருகன் பொதுச்செயலாளர் பதவிக்கு நிறுத்தப்படுவார். பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு எம்.பி. போட்டியிடுவார். இவர்களை எதிர்த்து வேறு யாரும் மனு தாக்கல் செய்ய மாட்டார்கள் என்பதால் போட்டியின்றி மீண்டும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

இதுபற்றிய அதிகாரப் பூர்வ அறிவிப்பு பொதுக்குழுவில் அறிவிக்கப்படும்.

இதற்காக வருகிற 9-ந் தேதி தி.மு.க. பொதுக்குழு கூடுகிறது. சென்னை கீழ்ப்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே உள்ள செயின்ட் ஜான்ஸ் பள்ளி மைதானத்தில் தி.மு.க. பொதுக்குழுவை நடத்த திட்டமிட்டுள்ளனர்.

பொதுக்குழுவுக்கான முன் ஏற்பாடுகள் இப்போதே தொடங்கி விட்டது.

Tags:    

Similar News