விமானத்தில் கடத்தி வந்த ரூ.3½ கோடி உயர்ரக கஞ்சா பறிமுதல்- பயணி கைது
- கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.
- பயணி ஒருவர் சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.
ஆலந்தூர்:
தாய்லாந்து நாட்டு தலைநகர் பாங்காக்கில் இருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளிடம் சுங்க அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது சென்னையைச் சேர்ந்த சுமார் 35 வயது ஆண் பயணி ஒருவர் சுற்றுலாப் பயணியாக தாய்லாந்து நாட்டிற்கு சென்று விட்டு திரும்பி வந்தார்.
அவரது நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரது உடமைகளை சோதனை செய்தனர். சூட்கேசுக்குள் மறைத்து வைத்திருந்த 7 பார்சல்களை பிரித்துப் பார்த்தபோது பதப்படுத்தப்பட்ட ஹைட்ரோபோனிக் உயர்ரக கஞ்சா கடத்தி வந்து இருப்பதை கண்டுபிடித்தனர். மொத்தம் 3½ கிலோ ஹைட்ரோபோனிக் கஞ்சா இருந்தது. இதன் சர்வதேச மதிப்பு ரூ.3½ கோடி ஆகும்.
இதையடுத்து கஞ்சா கடத்தி வந்த பயணியை கைது செய்து உயர்ரக கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.
சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இதே போல் தாய்லாந்து நாட்டில் இருந்து கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.6 கோடி மதிப்புடைய, 6 கிலோ ஹைட்ரோபோனிக் உயர் ரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு, வட மாநில இளம்பெண் கைது செய்யப்பட்டு இருந்தார்.
இந்த நிலையில், தற்போது மீண்டும் தாய்லாந்து நாட்டில் இருந்து, கடத்தி வரப்பட்ட ரூ.3½ கோடி மதிப்புடைய ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை விமான நிலையத்தில் அடுத்தடுத்து 2 நாட்களில் ரூ.9.5 கோடி மதிப்புடைய 9.5 கிலோ ஹைட்ரோபோனிக் உயரக கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு உள்ள சம்பவம் அதிகாரிகளை அதிர்ச்சி அடைய செய்து உள்ளது.