ஆரணி பேரூராட்சியுடன் மல்லியங்குப்பம் ஊராட்சியை இணைக்க எதிர்ப்பு
- வீட்டு வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகள் ஏற்படும்.
- பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
பெரியபாளையம்:
சோழவரம் ஒன்றியத்துக்கு உட்பட்டது மல்லியங்குப்பம் ஊராட்சி. இங்கு சுமார் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த நிலையில், மல்லியங்குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில், மல்லியங் குப்பம் ஊராட்சியை ஆரணி பேரூராட்சியுடன் இணைத்தால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும். வீட்டு வரி,தொழில் வரி உள்ளிட்ட வரி உயர்வுகள் ஏற்படும்.
இதனால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து கிராமமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
நேற்று மதியம் மல்லியங்குப்பம் ஊராட்சியை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் புதுவாயல்-பெரியபாளையம் நெடுஞ்சாலையில் ஆரணி மார்க்கெட் பகுதியில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச்செய்தனர்.
இதைத்தொடர்ந்து மல்லியங்குப்பம் கிராமமக்கள் தங்களது கிராமத்தை ஆரணி பேரூராட்சியுடன் இணைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் பிரபு சங்கர் மற்றும் ஊரக வளர்ச்சி உதவி இயக்குனர் பரணி ஆகியோரை நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அப்போது கலெக்டர் பிரபுசங்கர் கூறும்போது, பிப்ரவரி 9-ந் தேதிக்குள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் வருவாய் துறை கருத்து கேட்பு கூட்டம் உள்ளிட்ட நடைமுறை விதிகள் மேற்கொள்ளப் படும். உங்களது கோரிக்கை மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.