உள்ளூர் செய்திகள்

நாங்குநேரி அருகே கொலை செய்யப்பட்ட புதுமாப்பிள்ளை உடலை வாங்க மறுத்து 2-வது நாளாக உறவினர்கள் போராட்டம்

Published On 2022-07-30 06:20 GMT   |   Update On 2022-07-30 06:20 GMT
  • சாமிதுரை குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்.
  • அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

களக்காடு:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள மஞ்சங்குளத்தை சேர்ந்தவர் சாமிதுரை (வயது 23).

இவருக்கு சமீபத்தில் தான் வீரவநல்லூரை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் பேசி நிச்சயித்துள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு ஒரு கும்பல் அவரை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். கொலையாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

சாமிதுரையின் சகோதரர் சுப்பையா என்பவரும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் சாமிதுரை கொலை செய்யப்பட்டது. அந்த பகுதியில் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த கொலை தொடர்பாக கோதைசேரியை சேர்ந்த முருகேசன், திசையன்விளையை சேர்ந்த விக்டர் ஆகிய 2 பேர் ராதாபுரம் கோர்ட்டில் சரண் அடைந்தனர். அவர்களை காவலில் எடுத்து விசாரிக்கும்போதுதான் கொலைக்கான முழுக்காரணம் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர். இதற்காக அவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை போலீசார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதற்கிடையே சாமிதுரை உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பாளை அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அவர்களிடம் தாசில்தார் இசக்கிபாண்டி பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது சாமிதுரை குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், அவரது குடும்பத்திற்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என அவரது உறவினர்கள் வலியுறுத்தினர்.இதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத்தொடர்ந்து சாமிதுரையின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் 2-வது நாளாக இன்றும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் ரிசாப், கூடுதல் டி.எஸ்.பி. மாரிஸ்வரன் ஆகியோர் சாமிதுரையின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே அப்பகுதியில் மேலும் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுக்கும் வகையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Tags:    

Similar News