தஞ்சை பெரியகோவிலுடன் ராஜராஜசோழன் உருவத்தை பச்சை குத்திய சேலம் வாலிபர்
- தனியார் நிறுவனத்தில் பேங்க் லாக்கர் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள ஜெயபிரகாஷ் ராஜராஜ சோழன் மீது கொண்ட பற்றின் காரணமாக முதுகில் பச்சை குத்தியுள்ளார்.
- ராஜராஜசோழன் பிறந்த நாளான்று காலை 10 மணிக்கு டாட்டூ வரைய தொடங்கிய இவர் இந்த பணியை முடிக்க இரவு 12 மணி வரை ஆனதாக ஜெயபிரகாஷ் கூறுகிறார்.
சேலம்:
ராஜராஜசோழன் வரலாற்றை உணர்த்தும் விதமான 'பொன்னியின் செல்வன்' நாவல் மற்றும் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களிலும் ராஜராஜசோழன், அவர் கட்டிய தஞ்சை பெரிய கோவில் குறித்த புதிய புதிய தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளன. தமிழரின் பெருமையை பாறைசாற்றும் இந்த தகவல்களை பலரும் ஆர்வமுடன் படித்து தெரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில் சேலத்தைச் சேர்ந்த வாலிபர் ராஜராஜசோழன் மற்றும் தஞ்சை பெரிய கோவில் உருவத்தை டாட்டூ வரைந்து விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளார். சேலம் மரவனேரியை சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் (வயது30).
தனியார் நிறுவனத்தில் பேங்க் லாக்கர் டெலிவரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள இவர் ராஜராஜ சோழன் மீது கொண்ட பற்றின் காரணமாக முதுகில் பச்சை குத்தியுள்ளார்.
ராஜராஜசோழன் பிறந்த நாளான்று காலை 10 மணிக்கு டாட்டூ வரைய தொடங்கிய இவர் இந்த பணியை முடிக்க இரவு 12 மணி வரை ஆனதாக கூறுகிறார். சேலம் அம்மாப்பேட்டையை சேர்ந்தவர் நம்பி என்பவர் இந்த டாட்டூ படத்தை வரைந்துள்ளார்.
தமிழ் மன்னர்களின் ராஜராஜசோழனின் காலம் வரலாற்று சிறப்புமிக்கதாகும். நான் படிக்கும் போது அவரது வரலாற்றை விரும்பி வாசித்துள்ளேன். பின்னர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை படித்துள்ளேன். சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தையும் பார்த்தேன். ராஜராஜ சோழன் குறித்த வரலாற்று தகவல்கள் இன்றைய இளம்தலைமுறையினருக்கு தெரியவேண்டும் என்பதே எனது நோக்கம்.
அவரது பிறந்த நாளை அரசு விழாவாக கொண்டாடுவது மகிழ்ச்சி.
அந்த காலத்தில் தஞ்சை பெரிய கோவில் கட்டி தமிழ் மீது வைத்துள்ள பற்றை வெளிப்படுத்தும் விதமாக எனது முதுகில் பெரியகோவிலையும், ராஜராஜ சோழனின் படத்தையும் வரைந்துள்ளேன்.
இவ்வாறு அவர் கூறினார்.