உள்ளூர் செய்திகள்

முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா நினைவேந்தல் நிகழ்ச்சி- அமைச்சர் உதயநிதி கலந்துகொண்டார்

Published On 2023-09-21 16:37 IST   |   Update On 2023-09-21 16:37:00 IST
  • விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் சிறப்பாக செய்திருந்தார்.
  • அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு டி.குன்னத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து மேளதாளங்கள் முழங்கிட எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தனர்.

திருமங்கலம்:

மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில், மாவட்டச் செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் ஏற்பாட்டின் பேரில் திருமங்கலம் அருகே முத்தப்பன்பட்டியிலுள்ள சேடபட்டியார் திடலில் முன்னாள் சபாநாயகர் சேடபட்டி இரா.முத்தையாவின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,500 பேருக்கு தலா ரூ.10ஆயிரம் பொற்கிழி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கிடும் விழா இன்று நடைபெற்றது.

விழாவிற்கு மாவட்டச் செயலாளர் சேடபட்டி மு. மணிமாறன் தலைமை தாங்கினார். வடக்கு மாவட்டச் செயலாளரும், அமைச்சருமான பி.மூர்த்தி, மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.தளபதி எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற இவ்விழாவில் தி.மு.க. இளைஞரணி செயலாளரும், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் சிறப்பாளராக கலந்து கொண்டார்.

முதலில் அவர் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள சேடப்பட்டி முத்தையாவின் நினைவிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்தும், மலர் தூவியும் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் தி.மு.க. மூத்த முன்னோடிகள் 1,500 பேருக்கு பொற்கிழி வழங்கி கௌரவித்தார்.

முன்னதாக விழாவிற்கு வருகை தந்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு டி.குன்னத்தூர் பகுதியில் ஆயிரக்கணக்கான கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் திரண்டு வந்து மேளதாளங்கள் முழங்கிட எழுச்சிமிகு வரவேற்பு கொடுத்தனர். அதே போன்று முத்தப்பன் பட்டியில் பிரமாண்ட பந்தல்கள், முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையாவின் வாழ்க்கை வரலாற்றினை சித்தரிக்கும் புகைப்பட காண்காட்சி, வழிநெடுகிலும் வரவேற்பு, வாகனங்களை நிறுத்தும் வசதிகள் பிரமாண்டமாக செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சேடபட்டி மு.மணிமாறன் சிறப்பாக செய்திருந்தார். முன்னாள் சபாநாயகர் சேடபட்டி முத்தையா முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி மற்றும் தி.மு.க. மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கிடும் விழாவையொட்டி முத்தப்பன்பட்டி பகுதி முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது.

Tags:    

Similar News