உள்ளூர் செய்திகள்

சேந்தமங்கலம் அருகே தலையில் கல்லை போட்டு மனைவியை கொன்ற கணவர்

Published On 2023-06-09 11:15 IST   |   Update On 2023-06-09 11:15:00 IST
  • குடும்ப தகராறில் மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவரை போலீசார் கைது செய்தனர்.
  • கொலை பேளுக் குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொல்லிமலை:

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள பேளுக்குறிச்சி தேவேந்திர தெரு மேற்கு வீதியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 61). இவரது மனைவி சின்ன பொண்ணு (வயது 88). இவர்களுக்கு சின்ராசு கோபால் ஆகிய 2 மகன்கள் உள்ளனர்.

மாரியப்பனும், சின்ன பொண்ணுவும் கூலி வேலை செய்து வந்தனர். மாரியப்பனுக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது. இதனால் அடிக்கடி குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். நேற்று இரவு குடித்துவிட்டு வந்த மாரியப்பன் மனைவியிடம் தகராறு செய்தார்.

பின்பு இருவரும் தூங்க சென்றுவிட்டனர். இன்று அதிகாலை திடீரென்று எழுந்த மாரியப்பன் வீட்டுக்கு வெளியே கிடந்த கல்லை எடுத்து வந்து வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சின்னப்பொண்ணுவின் தலையில் போட்டார்.

இதில் சின்னப்பொண்ணு தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உடனே மாரியப்பன் பேளூக்குறிச்சி போலீஸ் நிலையத்திற்கு சென்று கொலை பற்றிய விவரத்தை கூறி சரண் அடைந்தார்.

உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட சின்ன பொண்ணு உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தடயவியல் நிபுணர்கள் விரைந்து வந்து தடயங்களை சேகரித்தனர்.

சேந்தமங்கலம் டி.எஸ்.பி. செந்தில்குமார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினார். இந்த கொலை தொடர்பாக மாரியப்பனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்த கொலை பேளுக் குறிச்சி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News