உள்ளூர் செய்திகள்

திருவண்ணாமலையில் வடக்கு மண்டல தி.மு.க. வாக்கு சாவடி முகவர்கள் கூட்டம்: முதலமைச்சருக்கு பிரமாண்ட வரவேற்பு

Published On 2023-10-22 09:32 IST   |   Update On 2023-10-22 09:32:00 IST
  • முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்தார்.
  • முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.

வேங்கிக்கால்:

திருவண்ணாமலையை அடுத்த மலப்பாம்பாடி கிராமத்தில் தி.மு.க. சார்பில் வடக்கு மண்டல அளவிலான வாக்குசாவடி முகவர்கள் பயிற்சிப் பட்டறை கூட்டம் இன்று மாலை நடக்கிறது.

இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகிறார்.

கூட்டத்தில் திருவண்ணாமலை, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தர்மபுரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 13 ஆயிரம் வாக்குச்சாவடி முகவர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் இன்று காலை முதல் திருவண்ணாமலையில் குவிய தொடங்கினர்.

இதற்காக மலப்பாம்பாடியில் பிரமாண்ட பந்தல் மேடை அமைக்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருவண்ணாமலை மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக நேற்று மாலை திருவண்ணாமலைக்கு வந்தார்.

அவருக்கு மாவட்ட எல்லையான கீழ்பென்னாத்தூர் ஒன்றியம் சோ.காட்டுக்குளம் பகுதியில் பொதுப்பணித்துறை அமைச்சரும், மாவட்ட செயலாளருமான எ.வ.வேலு தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது முதலமைச்சர் ஸ்டாலினுக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, நினைவு பரிசு வழங்கி வரவேற்றார்.

தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, கலெக்டர் முருகேஷ், மருத்துவரணி துணைத் தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன், சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ. கிரி, பெ.சு.தி.சரவணன், ஓ.ஜோதி, அம்பேத்குமார், வசந்தம் கார்த்திகேயன், வடக்கு மாவட்ட செயலாளர் தரணிவேந்தன் மற்றும் நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் வரவேற்றனர்.

இதனைத் தொடர்ந்து இன்று காலை திருவண்ணாமலை அருணை மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் 600 படுக்கை வசதிகள் கொண்ட பல்நோக்கு ஆஸ்பத்திரி கட்டிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்து, பார்வையிடுகிறார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை தி.மு.க. பயிற்சி பட்டறை கூட்டத்துக்கு செல்கிறார்.

அதன் பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை நகராட்சி பள்ளி எதிரில் உள்ள கலைஞர் திடலில் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்துகின்றார்.

முதலமைச்சரின் வருகையை முன்னிட்டு வடக்கு மண்டல ஐ.ஜி. கண்ணன் தலைமையில் வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் மேற்பார்வையில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Tags:    

Similar News