வேடசந்தூர் அருகே இட பிரச்சினையில் மாற்றுத்திறனாளியை தாக்கிய கும்பல்- ராணுவ வீரருக்கு கொலை மிரட்டல்
- வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த நெல்சனை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர்.
- வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
வேடசந்தூர்:
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் எஸ்.ஏ.பி. நகரை சேர்ந்தவர் நெல்சன் (வயது 35). மாற்றுத்திறனாளியான இவர் ரியல் எஸ்டேட் இடைத்தரகராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த பிரபாகரன்(23) சந்தோஷ் (22) ஆகாஷ் (20) ஆகிய 3 பேரும் இட பிரச்சினை காரணமாக நெல்சனுடன் முன்விரோதம் ஏற்பட்டது.
இந்த நிலையில் வீட்டின் முன்பாக அமர்ந்திருந்த நெல்சனை இரும்பு கம்பியால் கடுமையாக தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனர். இதில் தலை, முகத்தில் பலத்த காயம் அடைந்த நெல்சன் வேடசந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் முதலுதவி சிகிச்சை பெற்று மேல் சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறார்.
நெல்சன் அளித்த புகாரின் பேரில் வேடசந்தூர் போலீசார் 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் நெல்சனை தாக்கிய 3 இளைஞர்களும் அடுத்த தெருவில் உள்ள முன்னாள் ராணுவ வீரர் பாண்டி (55) என்பவர் வீட்டிற்கு சென்று உள்ளே நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிள்களை தள்ளிவிட்டு இரும்பு கம்பியால் கேட்டை உடைத்து கலாட்டா செய்துள்ளனர்.
இதுகுறித்து முன்னாள் ராணுவ வீரர் தட்டி கேட்ட போது நெல்சனை தாக்கியது போன்று உன்னையும் தாக்குவோம் என்று கொலை மிரட்டல் விடுத்து சென்றதாக பாண்டி தனது வீட்டில் இருந்த கண்காணிப்பு கேமரா பதிவு ஆதாரத்துடன் அளித்த புகாரின் பேரிலும் வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.