பரோட்டா மாஸ்டர் மண்டையை உடைத்த 4 பேர் கொண்ட கும்பலுக்கு வலைவீச்சு
- ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சேதுராமனை தாக்கினர்.
- தாக்குதல் காட்சிகள் அனைத்தும் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவானது.
ஈரோடு:
புதுக்கோட்டை மாவட்டம் பொன் அமராவதி, நாகப்பட்டியை சேர்ந்தவர் சேதுராமன் (27). இவர் ஈரோடு பகுதியில் தங்கியிருந்து சூரம்பட்டி நால் ரோட்டில் உள்ள ஓட்டலில் கடந்த 2 வருடங்களாக பரோட்டா மாஸ்டராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணிக்கு ஓட்டலுக்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்துள்ளனர். அப்போது அவர்களிடம் கடையில் அமர்ந்து சாப்பிடும் நேரம் முடிந்து விட்டதால் பார்சலில் மட்டும் உணவு வழங்க முடியும் என சேதுராமன் கூறியதாக தெரிகிறது.
இது தொடர்பாக சேதுராமனுக்கும், அந்த 4 பேர் கொண்ட கும்பலுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 4 பேர் கொண்ட கும்பல் சேதுராமனை தாக்கினர். மேலும் அதில் ஒருவர் கீழே கிடந்த தேங்காயை எடுத்து சேதுராமன் மீது வீசினார். இதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதையடுத்து 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். காயமடைந்த சேதுராமன் ஈரோடு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தாக்குதல் காட்சிகள் அனைத்தும் ஓட்டலில் பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கேமரா காட்சிகளில் பதிவானது. இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இதுகுறித்து ஈரோடு அரசு மருத்துவமனை போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி ஓடிய 4 பேரை வலைவீசி தேடி வருகின்றனர். மேலும் இந்த கும்பல் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது.