உள்ளூர் செய்திகள்

விநாயகர் சதுர்த்தி சிறப்பு சந்தை: கோயம்பேடு மார்க்கெட்டில் 100 டன் பொருட்கள் வீணாக கொட்டப்பட்டது

Published On 2022-09-02 16:31 IST   |   Update On 2022-09-02 16:31:00 IST
  • கொரோனா பாதிப்புக்கு பின்னர் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற சிறப்பு சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வெளி வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்தும், லாரிகளில் வைத்தும் தங்களது பொருட்களை விற்பனை செய்தனர்.
  • இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாகனங்களில் பொருட்கள் விற்பனைக்கு குவிந்ததால் சிறப்பு சந்தை களை கட்டியது.

போரூர்:

விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் கடந்த 25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை பூ மார்கெட் வளாகத்தில் பொதுமக்கள் வசதிக்காக சிறப்பு சந்தை திறக்கப்பட்டது.

இங்கு மதுரை, கடலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து 200-க்கும் மேற்பட்ட லாரிகளில் கரும்பு, திண்டுக்கல் மாவட்டத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் பேரிக்காய், தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து 50-க்கும் மேற்பட்ட லாரிகளில் கம்பு, கர்நாடகா மாநிலத்தில் இருந்து 10-க்கும் மேற்பட்ட லாரிகளில் சோளம், பொள்ளாச்சி பகுதியில் இருந்து தேங்காய் மற்றும் ஏராளமான மினி வேன்கள் மூலம் அவல், பொறி, தோரணங்கள் உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்கு குவிந்தது.

கொரோனா பாதிப்புக்கு பின்னர் 2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற்ற இந்த சிறப்பு சந்தையில் 100-க்கும் மேற்பட்ட வெளி வியாபாரிகள் தற்காலிக கடைகள் அமைத்தும், லாரிகளில் வைத்தும் தங்களது பொருட்களை விற்பனை செய்தனர்.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வாகனங்களில் பொருட்கள் விற்பனைக்கு குவிந்ததால் சிறப்பு சந்தை களை கட்டியது. கடைசி 2 நாட்கள் சில்லரை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் வரத்து அதிகரித்து விற்பனை சூடு பிடித்தது.

எனினும் கரும்பு, பேரிக்காய், விளாங்காய் உள்ளிட்ட 100டன் அளவிலான பொருட்கள் விற்பனை ஆகாமல் தேக்கமடைந்து வீணாகின. அதனை வியாபாரிகள் குப்பையில் கொட்டிவிட்டு சென்றனர்.

வழக்கத்தை விட 200 லாரிகளில் கரும்பு குவிந்ததால் அதிக அளவில் தேக்கம் அடைந்து இருந்தன. பொதுமக்கள் கரும்பு கட்டுகளை வாங்கி செல்ல ஆர்வம் காட்டவில்லை. இதனால் கரும்பு வியாபாரிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்பட்டது.

Tags:    

Similar News