கோவில்பட்டியில் இடி-மின்னலுடன் பரவலாக மழை
- தூத்துக்குடி சாலையில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது.
- எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், நேற்று மாலையில் வானில் கருமேக கூட்டங்கள் திரண்டன.
தொடர்ந்து சிறிது நேரத்தில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. சில இடங்களில் கழிவு நீரும், மழைநீருடன் கலந்து ஓடியது.
கோவில்பட்டியில் இருந்து இளையரசனேந்தல் செல்லும் சாலையில் உள்ள ரெயில்வே சுரங்கபாதையில் மழைநீர் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எட்டயபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களிலும் இடி-மின்னலுடன் கனமழை பெய்தது.
தூத்துக்குடி சாலையில் 10-க்கும் மேற்பட்ட மரங்கள் முறிந்து விழுந்தது. அதன் அருகே நின்ற மின்கம்பங்களில் மரங்கள் விழுந்ததால் மின்சாரமும் தடைபட்டது.
கயத்தாறு அருகே உள்ள கடம்பூரில் நேற்று மாலையில் பெய்த கனமழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இன்று காலை நிலவரப்படி அதிகபட்சமாக 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியது.
கோவில்பட்டியில் 20.2 மில்லிமீட்டரும், எட்டயபுரத்தில் 17.2 மில்லிமீட்டரும், தூத்துக்குடியில் 2 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது.