சரக்கு வாகனம் மீது டேங்கர் லாரி மோதி விபத்து: போக்குவரத்து பாதிப்பு
- நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கச்சா எண்ணை வெளியேறி வருகிறது.
- ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
தருமபுரி:
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், தொப்பூர் கணவாய், கிருஷ்ணகிரி-சேலம் தேசிய நெடுஞ்சாலை போலீஸ் குடியிருப்பு பகுதி அருகே இன்று காலை 6:30 மணிக்கு மேல் புனேவில் இருந்து பெருந்துறைக்கு செந்தில் என்ற டிரைவர் டேங்கர் லாரியில் கச்சா எண்ணை பாராம் ஏற்றிக்கொண்டு சென்றுள்ளார்.
அப்போது டிரைவர் கட்டுப்பாட்டை இழந்த டேங்கர்லாரி முன்னால் சென்ற சரக்கு வாகனத்தின் மீது மோதி வண்டி சாலையில் கவிழ்ந்தது விபத்துக்கு உள்ளானது.
இதில் டேங்கர் லாரி தேசிய நெடுஞ்சாலையில் கவிழ்ந்து கச்சா எண்ணை வெளியேறி வருகிறது. இந்த டேங்கர் லாரியை ஓட்டி வந்த செந்தில்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது.
உடனே அந்த வழியாக சென்றவர்கள் தொப்பூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த தொப்பூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயம்பட்ட செந்தில்குமாரை மீட்டு தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் கவிழ்ந்த வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த விபத்தில் அதிர்ஷ்ட வசமாக உயிர்சேதம் ஏதும் ஏற்படவில்லை. விபத்து குறித்து தொப்பூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த விபத்தால், தொப்பூர் கணவாய் சுமார் ஒரு மணிநேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சிறிது நேரத்தில் போக்குவரத்து சரி செய்யப்பட்டது.