உள்ளூர் செய்திகள்

தைப்பூசம்: திருச்செந்தூரில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

Published On 2025-02-09 10:37 IST   |   Update On 2025-02-09 10:37:00 IST
  • சண்முகர் ஆண்டு விழா நாளை நடக்கிறது.
  • பக்தர்கள் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம்.

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கின்றனர். விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

இன்று (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை தினம் என்பதா லும், நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) தைப்பூசம் என்பதாலும், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பாதயாத்திரையாக அலகு குத்தியும், காவடி எடுத்தும் வந்தவாறு உள்ளனர்.

மேலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த ஏராளமான பக்தர்கள் காலையில் இருந்தே கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் சுமார் 2 மணி நேரம் வரை காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.

சண்முகர் கடலில் கண்டெடுக்கப்பட்டு 370 வருடங்கள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் சண்முகர் ஆண்டு விழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது. இதை முன்னிட்டு கோவில் நடை அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படுகிறது.

4.30 மணிக்கு விஸ்வரூப தீபாரதனையும், காலை 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், மாலை 3 மணிக்கு பிரதோஷ அபிஷேகம், 4 மணிக்கு சாயரட்சை தீபாராதனையும், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது.

நாளை மறுநாள் (செவ்வாய் கிழமை) தைப்பூச திருவிழா நடக்கிறது. தைப்பூசத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகிறது. 1.30 விஸ்வரூப தீபாராதனை, 4 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம்,காலை 6 மணியில் இருந்து 6.30 மணிக்குள் தீர்த்தவாரி நடக்கிறது.

10 மணிக்கு சண்முகர் அபிஷேகம், பகல் 1 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் தைப்பூச மண்டபத்துக்கு புறப்படுதல், மாலை 5 மணிக்கு சுவாமி அலைவாயுகந்த பெருமான் வீதியுலா வந்து கோவில் சேர்தல் நடக்கிறது.

தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடக்கிறது. பக்தர்கள் வசதிக்காக கோவில் நிர்வாகம் சார்பில் மருத்துவ வசதி, குடிநீர் வசதி, கழிப்பிட வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து நெருக்கடியை சமாளிக்க பக்தர்கள் வரும் வாகனங்கள் ஊருக்கு வெளியே பல்வேறு இடங்களில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News