தமிழகத்தில் பாஜகவை பிரதான எதிர்க்கட்சியாக தி.மு.க. தான் உருவாக்கி வருகிறது- அண்ணாமலை
- அரசியலை தாண்டி இருக்க கூடிய ஆதீனம் போன்றவர்களை மிரட்டுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்
- ஆதீனம், தீட்சிதர் விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது.
சேலம் மாவட்டம் நாகலூர் கிராமத்தில் மலைவாழ் மக்களை சந்தித்த பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அவர்களிடம் குறைகளை கேட்டு அறிந்தார். மத்திய அரசு மலைவாழ் மக்களுக்கு வழங்கி வரும் சலுகைகள் மற்றும் திட்டங்களை குறித்து அவர்களுக்கு விளக்கி கூறினார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தை ஆளும் தி.மு.க. செய்துவரும் ஊழல் குறித்து கூறினால் எங்கள் மீது வழக்கு தொடர்ந்து வாயை அடைத்து விட முடியும் என்று நினைப்பது தவறு. எந்த வழக்கையும் சந்திக்க தயாராக இருக்கிறேன்.
தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் ஊழலை யாரும் மறைக்க முடியாது. ஊர்ஜிதம் செய்த பின்பு ஊழல் தொடர்பான 2-வது பட்டியலை விரைவில் வெளியிடுவேன். அந்த பட்டியல் முதல் பட்டியலை விட 10 மடங்கு அதிகமானதாக இருக்கும்.
ஆதீனம், தீட்சிதர் விவகாரத்தில் மாநில அரசின் நடவடிக்கை மிரட்டும் தொனியில் உள்ளது. மதுரை ஆதீனம் மீது அமைச்சர் கங்கணம் கட்டிக்கொண்டு பேசி வரும் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. அரசியலை தாண்டி இருக்க கூடிய ஆதீனம் போன்றவர்களை மிரட்டுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியாக பாஜகவை, திமுக தான் உருவாக்கி வருகிறது. மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு எடுக்கும் முடிவுக்கு தமிழக பாஜக உறுதுணையாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.