உள்ளூர் செய்திகள்

திருச்சுழி அருகே சமூக ஆர்வலர் கொலை- மனைவி உள்ளிட்டோரிடம் போலீசார் விசாரணை

Published On 2023-09-18 13:52 IST   |   Update On 2023-09-18 13:52:00 IST
  • பல்வேறு குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.
  • போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருச்சுழி:

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகேயுள்ள பரளச்சி-நல்லாங்குளம் பகுதியை சேர்ந்தவர் கந்தன் (என்ற) கஜேந்திரன் மகன் மணிகண்டன் (வயது 35). கூலி வேலை செய்து வந்த இவருக்கு திருமணமாகி முத்துநாகு (23) என்ற மனைவி இருக்கிறார்.

மேலும் இருவருக்கும் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு குழந்தை பிறந்து இறந்து போன நிலையில் பல்வேறு குடும்ப பிரச்சனை காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகிறார்கள்.

இந்த நிலையில் இன்று காலை மணிகண்டன் நல்லாங்குளம் பகுதியில் உள்ள அரசு ஆரம்ப தொடக்கப் பள்ளி அருகே வெட்டு காயங்களுடன் முகம் சிதைந்த நிலையில் பிணமாக கிடந்தார். மேலும் இவர் நல்லாங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிக அதிகமாக அரங்கேறி வரும் சட்ட விரோத செயல்களான மணல் கடத்தல், கள்ளத்தனமான மதுபான விற்பனை, கஞ்சா ஆகியவற்றிற்கு எதிராக சமூக ஆர்வலராக குரல் கொடுத்து செயல்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.

முகம் சிதைந்த நிலையில் மீட்கப்பட்டு அடையாளம் தெரியாத அளவிற்கு இருந்ததால் இந்த கொலை சம்பவம் நேற்று இரவு நடந்திருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து மோப்ப நாய் உதவியுடன் சம்பவம் நடந்த இடமான அரசு தொடக்கப் பள்ளி அருகேயுள்ள பகுதிகள் முழுவதும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது திருச்சுழி துணை போலீஸ் சூப்பிரண்டு ஜெகநாதன் உடனிருந்தார்.இதனையடுத்து முகம் சிதைந்த நிலையில் இறந்து கிடந்த மணிகண்டனின் உடலை மீட்ட பரளச்சி போலீசார் அருப்புக்கோட்டை அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

இதற்கிடையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு மணிகண்டன்-முத்துநாகு தம்பதியினருக்கு குழந்தை பிறந்து இறந்ததால் பல்வேறு குடும்ப பிரச்சினை காரணமாக அடிதடியாகி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவும் செய்த நிலையில் தம்பதியினர் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதற்கிடையேதான் மணிகண்டன் இன்று கொலை செய்யப்பட்டு இருப்பதால் அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக இறந்து போன மணிகண்டனின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

முன் பகையால் நடந்த கொலையா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக மனைவியே ஆள் வைத்து கணவரை கொலை செய்தாரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மனைவி உள்ளிட்டோரிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News