உள்ளூர் செய்திகள்

வாழப்பாடி அருகே செல்போன் டவரில் ஏறி விவசாயி தற்கொலை மிரட்டல் போலீசார் பத்திரமாக மீட்டனர்

Published On 2023-03-29 15:06 IST   |   Update On 2023-03-29 15:06:00 IST
  • 6 மாதத்திற்கு முன் தந்தை இறந்து விட்ட நிலையில், தந்தை சொத்தில் தனக்கும் சரிபாதி பாகம் கொடுக்குமாறு பலமுறை தனது அண்ணன் ராமசாமியிடம் வரதராஜன் கேட்டுள்ளார்.
  • ராமசாமி கண்டுகொள்ளாததால் மனமுடைந்த விவசாயி வரதராஜன், நேற்று மன்னாயக்கன்பட்டி சிவாயநகர் அருகிலுள்ள செல்போன் டவரில் மீது ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார்.

வாழப்பாடி:

சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த மன்னாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி வரதராஜன் (வயது 54). இவரது தந்தை பெருமாளுக்கு 5 ஏக்கர் விவசாய நிலம் இருந்தது.

இந்த சொத்தை இளைய மகனான வரதராஜனுக்கு கொடுக்காமல், மூத்த மகன் ராமசாமிக்கே இவரது தந்தை எழுதிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. 6 மாதத்திற்கு முன் தந்தை இறந்து விட்ட நிலையில், தந்தை சொத்தில் தனக்கும் சரிபாதி பாகம் கொடுக்குமாறு பலமுறை தனது அண்ணன் ராமசாமியிடம் வரதராஜன் கேட்டுள்ளார்.

இதை ராமசாமி கண்டுகொள்ளாததால் மனமுடைந்த விவசாயி வரதராஜன், நேற்று மன்னாயக்கன்பட்டி சிவாயநகர் அருகிலுள்ள செல்போன் டவரில் மீது ஏறி, தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டல் விடுத்தார். இது குறித்து தகவலறிந்த வாழப்பாடி தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, டவரில் இருந்து இறங்கி வருமாறு வரதராஜனிடம் தெரிவித்துள்ளனர்.

ஆனால் அவர் இறங்க மறுத்ததால், வாழப்பாடி டி.எஸ்.பி ஹரிசங்கரி ஆலோசனையின் பேரில், தீயணைப்பு படைவீரர் ஒருவர் மற்றும் நுண்ணறிவு பிரிவு எஸ்.எஸ்.ஐ ஒருவரும் வரதராஜனிடம் பேச்சு கொடுத்தபடியே டவரில் ஏறி, 2 மணி போராட்டத்திற்கு பிறகு, வரதராஜனை கயிற்றில் தூரி கட்டி லாவகமாக மீட்டனர்.

சொந்தப் பிரச்சினைக்காக செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுப்பது சட்டப்படி குற்றம். சொத்து பிரச்சினை குறித்து விசாரணை நடத்தி தீர்வு ஏற்படுத்தி கொடுப்பதாக போலீசார் உறுதி அளித்து, விவசாயி வரதராஜனை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News