வாயில் எலியை கவ்வியபடி பயணிகளை மிரட்டிய வாலிபர்
- பஸ் நிலையம் முழுவதும் சுற்றி பயணிகள் அருகே சென்று மிரட்டினார்.
- மனநல சிகிச்சை அளிக்க டாக்டர்கள், சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
நத்தம்:
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பஸ் நிலையத்தில் சுமார் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் வாயில் எலியை கவ்வியபடி நடனமாடினார். நீண்ட நேரம் அவர் எலியை வாயில் இருந்து எடுக்காமல் பஸ் நிலையம் முழுவதும் சுற்றி பயணிகள் அருகே சென்று மிரட்டினார்.
இதை அங்கிருந்தவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்ததுடன் சிலர் வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதுகுறித்து கடை வியாபாரிகள் தெரிவிக்கையில், இந்த வாலிபரின் பெயர் முத்துப்பாண்டி என்றும் கடந்த சில வருடங்களாகவே இவர் நத்தம் பஸ் நிலையத்தில் சுற்றி வருவதாகவும் கூறினர்.
வியாபாரிகள் மற்றும் தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவை சாப்பிட்டு விட்டு இங்கேயே உள்ளார் என்றும், இவரது குடும்பத்தினர் எங்கு உள்ளார்கள்? என தெரியவில்லை எனவும் கூறினர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன்னார்வலர்கள் இவரை திருப்பத்தூரில் உள்ள மன நல மருத்துவ மையத்துக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். ஆனால் அங்கிருந்து மீண்டும் தப்பி ஓடி வந்து விட்டார். எனவே இவருக்கு மீண்டும் மன நல சிகிச்சை அளிக்க டாக்டர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.
பிதாமகன் படத்தில் வரும் விக்ரம் போல இவர் செய்யும் ஒவ்வொரு செயலும் வித்தியாசமாகவும், பொதுமக்களை மிரட்டும் வகையிலும் உள்ளது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.