ஆசியா பசிபிக் மாஸ்டர் கேம் போட்டிக்கு தென்கொரியா செல்லும் தேனி போலீஸ் ஏட்டு
- 2023 ஆம் ஆண்டு மே 12 முதல் 20ந் தேதி வரை ஆசியா பசிபிக் மாஸ்டர் கேம்ஸ் என்ற ஆசியாக்கண்டத்தில் உள்ள நாடுகள் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவில் நடைபெறுகிறது.
- ஆசிய பசிபிக் போட்டியில் கலந்து கொள்ள போலீஸ் ஏட்டு செல்வதால் அவருக்கு மாவட்ட எஸ்.பி. உள்பட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்தில் முதுநிலைக் காவலராக பணியாற்றுபவர் மாரியப்பன். இவர் விளையாட்டு வீரர். கடந்த மே மாதம் திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய அளவிலான போட்டிகளை கேரள அரசு மாஸ்டர் அசோசியேசன் ஸ்போர்ட்ஸ் ஆப் கேரளா என்ற அமைப்பு நடத்தியது.
இதில் கலந்து கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 12 காவலர்களில் மாரியப்பன் குண்டு எறிதல் போட்டியில் வெள்ளிபதக்கம், வட்டு எறிதல் மற்றும் சங்கிலி குண்டு எறிதல் போட்டிகளில் 2 வெண்கல பதக்கங்களையும் தேசிய அளவில் பெற்றார்.
இதனையடுத்து வருகிற 2023 ஆம் ஆண்டு மே 12 முதல் 20ந் தேதி வரை ஆசியா பசிபிக் மாஸ்டர் கேம்ஸ் என்ற ஆசியாக்கண்டத்தில் உள்ள நாடுகள் கலந்து கொள்ளும் விளையாட்டு போட்டிகள் தென்கொரியாவில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் கலந்து கொள்ள தேசிய அளவில் வெற்றி பெற்ற முதுநிலைக் காவலர் மாரியப்பனுக்கு அழைப்பு வந்துள்ளது.
இதனையடுத்து அவர் ஆசிய பசிபிக் போட்டியில் கலந்து கொள்ள செல்கிறார். அவருக்கு மாவட்ட எஸ்.பி. உள்பட போலீஸ் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இது குறித்து போலீஸ் ஏட்டு மாரியப்பனிடம் கேட்ட போது, தென்கொரியாவில் உள்ள ஜியோன் பக் நகரில் விளையாட்டு போட்டிகள் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க மாவட்ட எஸ்.பி.யிடம் அனுமதி பெற்றுள்ளேன்.பயிற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன், தமிழக காவல் துறைக்கு பெருமை சேர்ப்பேன் என்றார்.