உள்ளூர் செய்திகள்

அரசு பஸ் கண்டக்டரை தாக்கிய 2 வாலிபர்கள் கைது

Published On 2023-10-06 14:22 IST   |   Update On 2023-10-06 14:22:00 IST
  • இளம்பெண்ணை சீட்டில் அமர சொன்னதால் வாக்குவாதம்
  • போலீசார் விசாரணை

போளூர்:-

ஆரணி அடுத்த களம்பூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 53). அரசு பஸ் கண்டக்டர்.

இவர் சென்னையில் இருந்து பயணிகளை பஸ்சில் ஏற்றிக்கொண்டு போளூர் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

மட்டபிறையூர் என்ற இடத்தில் பஸ் நின்றது. பஸ்சில் 2 இளம்பெண்கள் ஏறினர். அதில் ஒரு இளம்பெண் சீட்டில் அமர்ந்தார். இன்னொருவர் நின்று கொண்டு பயணம் செய்தார்.

அப்போது கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தி நின்று கொண்டிருந்த இளம்பெண்ணிடம் சீட்டு காலியாக உள்ளதே அதில் அமர மாட்டீர்களா என்று கூறினார்.

இதனால் இளம்பெண் அழுது கொண்டு தனது உறவினரான போளூர் டவுனை சேர்ந்த சீனிவாசன் (வயது 35) என்பவரிடம் தெரிவித்தார்.

பஸ் போளூர் பஸ் நிலையத்தில் வந்து நின்றபோது கண்டக்டர் கிருஷ்ணமூர்த்தியிடம் இளம் பெண்ணிடம் ஏன் இப்படி பேசினாய் என்று சீனிவாசன் தகராறில் ஈடுபட்டார்.

இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமடைந்த சீனிவாசன் மற்றும் அவரது நண்பரான எந்தல் பகுதி சேர்ந்த அருண்குமார் (31) ஆகியோர் சேர்ந்து கிருஷ்ணமூர்த்தியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவருக்கு காயம் ஏற்பட்டது.

இது குறித்து கிருஷ்ணமூர்த்தி போளூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்குமார், சீனிவாசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News