உள்ளூர் செய்திகள்

சத்துணவில் பல்லி விழுந்ததில் 50 மாணவர்கள் மயக்கம்

Published On 2023-07-17 15:21 IST   |   Update On 2023-07-17 15:21:00 IST
  • மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தினர்
  • அமைப்பாளர் சஸ்பெண்டு

திருவண்ணாமலை:

திருவண்ணாமலை அருகே தண்டரை கிராமத்தில் ஒரே வளாகத்தில் அரசு தொடக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப் பள்ளி தனித்தனியாக செயல்பட்டு வருகிறது.

தினந்தோறும் தொடக்கப் பள்ளியில் சத்துணவு சமைத்து 2 பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டு வருவது வழக்கம்.

இந்நிலையில் காமராஜர் பிறந்த நாளையொட்டி மாணவர்களுக்கு கலவை சாதத்துடன் கூடுதலாக சர்க்கரை பொங்கல் வழங்கப்பட்டது.

இதனை மாணவர்கள் ஆர்வத்துடன் வாங்கி சாப்பிட்டனர்.

ஒரு மாணவரின் பொங்கலில் பல்லி இறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவர்கள் ஆசிரியர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனிடையே உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டு 50 பேர் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேஷ் மூர்த்தி, தொடக்கக்கல்வி மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் ஆகியோர் சத்துணவு ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் சத்துணவு சமைப்பதில் அலட்சியமாக செயல்பட்டதாக அமைப்பாளர் ஷியாமளா, சமையலர் மஞ்சுளா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

Tags:    

Similar News