நகராட்சி கூட்டத்தில் திடீரென புகுந்து பேசிய தொழிலாளி
- தரமற்ற ரேசன் அரிசி வழங்குவதாக புகார்
- ஆரணி கவுன்சிலர்கள் அதிர்ச்சி
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சியில் 33 வார்டுகள் உள்ளன.
இதில் நகர மன்ற தலைவராக தி.மு.க.வை சேர்ந்த ஏ.சி.மணி உள்ளிட்ட 33 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர்.
நேற்று ஆரணி நகராட்சி அலுவலகம் கூட்ட அரங்கில் நடைபெற்ற கூட்டத்திற்கு நகரமன்ற துணை தலைவர் பாரிபாபு முன்னிலை வகித்தார். ஆணையர் குமரன் வரவேற்றார். நகர மன்ற தலைவர் ஏ.சி.மணி தலைமை தாங்கினார்.
முன்னதாக நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில் தேர்தெடுக்கபட்ட நகர மன்ற தலைவர், துணை தலைவர் மன்ற உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் மதிப்பூதியம் வழங்கி ஆணை பிறப்பித்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிப்பது உள்ளிட்ட 15 தீர்மானங்கள நிறைவேற்றப்பட்டன.
நகரமன்ற கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஆரணி டவுன் கார்த்திகேயன் சாலை பகுதியை சேர்ந்த பழனி என்பவர் திடீரென உள்ளே புகுந்தார்.
அப்போது வைகை கூட்டுறவு அங்காடி-2ல் வழங்கபட்ட அரிசி தரமற்ற முறையில் உள்ளதாக கூறி நகர மன்ற தலைவர் ஏ.சி.மணியிடம் முறையிட்டார்.
அவரிடம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் உங்களை யார் உள்ளே வர அனுமதி கொடுத்தார்கள். தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவ லகத்திற்கு செல்லுமாறு கூறி வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பாதுகாப்பில் இருந்த போலீசார் உடனடியாக பழனியை சமரசம் செய்து கவுன்சிலர்கள் கூட்ட அரங்கில் இருந்து வெளியே அனுப்பினர். இதனால் சிறிது நேரம் கவுன்சிலர்கள் கூட்டத்தில் பரபரப்பாக காணப்பட்டது.