அரசு திட்டபணிகள் குறித்து முதன்மை செயலாளர் ஆய்வு
- பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவு
- உணவுகளை தயாரிக்கும் முறை, தரம் குறித்தும் கேட்டறிந்தார்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து துறைகளின் வளர்ச்சி மற்றும் திட்ட செயலாக்கம் குறித்த ஆய்வுக்கூட்டம் அரசு முதன்மை செயலாளர், மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீரஜ்குமார் தலைமையில் நடந்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் அரசின் திட்டங்கள் சிறப்பான முறையில் செயல்படுத்த வேண்டும். திட்டப்பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், நான் முதல்வன் திட்டம், முதல்-அமைச்சரின் காலை உணவு திட்டம் ஆகியவை சரியான முறையில் நடைமுறை படுத்தப்பட்டு வருகிறதா என ஆய்வு செய்தார்.
மேலும் காலை உணவு திட்டத்தில் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளை தயாரிக்கும் முறை, தரம் குறித்தும் கேட்டறிந்தார்.
மக்களை தேடி மருத்துவம், முதல்-அமைச்சரின் மருத்துவ காப்பீட்டு திட்டம், விளையாட்டு விடுதி மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் ஆகியவற்றை ஆய்வு செய்த பின் நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என தீரஜ்குமார் உத்தரவிட்டார்.
தொடர்ந்து திருவண்ணாமலை நகராட்சி அலுவலக வளாகத்தில் ரூ.1 கோடியே 99 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமான பணிகள், கீழ்பென்னாத்தூர் அடுத்த நாரியமங்கலம் கிராம ஊராட்சியில் 13 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையம், 6 லட்சத்து 19 ஆயிரம் மதிப்பில் மூன்று வகுப்பறை கட்டிடங்கள் பழுது பார்க்கும் பணி, கீழ்பென்னாத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறை, அடிப்படை வசதிகள் குறித்தும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு செய்தார்.
கலெக்டர் முருகேஷ், கூடுதல் கலெக்டர் ரிஷப், மாவட்ட வருவாய் அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி, மகளிர் திட்ட இயக்குநர்சையித் சுலைமான், சார் ஆட்சியர் அனாமிகா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் வெற்றிவேல், சுகாதார பணிகள் இணை இயக்குநர் செல்வகுமார், பேரூராட்சிகள் உதவி இயக்குநர் கணேஷ், கோட்டாட்சியர்கள் மந்தாகினி, தனலட்சுமி, தாசில்தார் சரளா, சாப்ஜான் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.