உள்ளூர் செய்திகள்

தூத்துக்குடியில் 3-வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

Published On 2024-11-28 05:07 GMT   |   Update On 2024-11-28 05:07 GMT
  • பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.
  • உப்பாற்று ஓடையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சகதியாக காட்சியளிக்கிறது.

தூத்துக்குடி:

தென் மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் காரணமாக நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

இன்று காலை வரை தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகபட்சமாக ஓட்டபிடாரத்தில் 20 மில்லி மீட்டரும், சூரன்குடியில் 18 மில்லி மீட்டரும், வைப்பாரில் 12 மில்லி மீட்டரும் மழை பதிவாகி உள்ளது. இதேபோல் தூத்துக்குடி, கோவில்பட்டி, கழுகுமலை, கயத்தாறு, எட்டயபுரம், விளாத்திகுளம், காடல்குடி, மணியாச்சி, வேடநத்தம், கீழ வைப்பார் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்துள்ளது.

தொடர்மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் சில இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. உப்பாற்று ஓடையில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் சகதியாக காட்சியளிக்கிறது.

நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை நேற்று மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளிலும், அணை பகுதிகளிலும் மழை பெய்தது. கொடுமுடியாறு பகுதிகளில் 5 மில்லி மீட்டர் மழை பதிவானது. 55.50 அடி உயரம் கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் இன்று 40 அடியாக உள்ளது. இதேபோல் பிரதான அணையான பாபநாசம் அணை நீர்மட்டம் 88.60 அடியாகவும், சேர்வலாறு அணை நீர்மட்டம் 88.35 அடியாகவும், மணிமுத்தாறு அணையின் நீர்மட்டம் 80 அடியாகவும் உயர்ந்துள்ளது.

நெல்லை, பாளை உள்ளிட்ட மாநகர பகுதிகளில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை சாரல் மழை பெய்தது.

கனமழை, புயல் எச்சரிக்கையை முன்னிட்டு மீனவர்கள் 29-ந் தேதி வரை கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என மீன்வளத்துறையினர் எச்சரிக்கை விடுத்திருந்தனர். இதனால் தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக விசைபடகு மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இன்று 3 வது நாளாக விசைபடகு, நாட்டு படகு மீனவர்கள் சுமார் 10 ஆயிரம் பேர் கடலுக்கு செல்லவில்லை. இதனால் படகுகள் கரையில் நிறுத்தப்பட்டிருந்தது.

இதேபோல நெல்லை மாவட்டத்தில் உள்ள கூட்டப்புளி, பெருமணல், இடிந்தகரை, கூந்தங்குடி, உவரி, கூடுதாழை உள்ளிட்ட மீனவ பகுதிகளை சேர்ந்த 8 ஆயிரம் மீனவர்களும் இன்று கடலுக்கு செல்லவில்லை.

Tags:    

Similar News