உள்ளூர் செய்திகள்

கைதான தனலட்சுமி, பாப்பாத்தி, கோமதி


சொத்துக்கு ஆசைப்பட்டு மாமியாருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்ல முயன்ற மருமகள் உள்பட 3 பேர் கைது

Published On 2025-02-09 10:26 IST   |   Update On 2025-02-09 10:26:00 IST
  • சரவண பெருமாள் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
  • கோமதி ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்ச்செல்வியின் அம்மா பாப்பாத்தியுடன் காரில் சென்று தனலட்சுமி வீட்டை தேடி உள்ளார்.

திருச்செங்கோடு:

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு குச்சிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 77). இவருக்கு 2 மகன்கள். இதில் ஒரு மகன் இறந்துவிட்ட நிலையில் சரவண பெருமாள் என்கிற ஒரு மகன் மட்டும் உள்ளார்.

இந்த நிலையில் சரவண பெருமாள் வரப்பாளையம் பகுதியை சேர்ந்த வேறு சமூகத்து பெண்ணான தமிழ்ச்செல்வி (41) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டு தாயாரை விட்டு பிரிந்து வரப்பாளையம் பகுதியில் வசித்து வருகிறார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

இதற்கிடையே தனலட்சுமி தனது மகனிடம் மருமகள் தமிழ்ச்செல்வியை விட்டு பிரிந்து வந்தால் உனக்கு வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து தருவதாகவும், சொத்தில் பங்கு தருவதாகவும் கூறியுள்ளார். இதனால் சரவண பெருமாள் அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.

இதனிடையே தனது மாமியாரின் திட்டதை அறிந்த தமிழ்ச்செல்வி என்னிடம் இருந்து எனது கணவரையே பிரிக்க முடிவு செய்கிறாயா? உன்னையே நான் தீர்த்துக்கட்டுகிறேன் என தானும் ஒரு திட்டத்தை வகுத்தார்.

மாமியாரை கொலை செய்து விட்டால் சொத்து முழுவதும் தனக்கு கிடைத்துவிடும். தனது கஷ்டம் தீர்ந்து விடும் என கருதிய தமிழ்ச்செல்வி அதற்கான முயற்சியில் ஈடுபட்டார். தனது தாயார் பாப்பாத்தியுடன் சேர்ந்து தமிழ்ச்செல்வி திட்டம் தீட்டி வந்த நிலையில், தனது கணவருக்கு உடல் நலம் சரியில்லை என்றால் ஊசி போட அடிக்கடி வீட்டுக்கு வரும் திருச்செங்கோடு ராஜா கவுண்டம்பாளையத்தை சேர்ந்த நர்சிங் உதவியாளராக வேலை செய்து வந்த கோமதி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து தமிழ்ச்செல்வி, கோமதியிடம் 'மக்களை தேடி மருத்துவம்' திட்ட முகாமின் நர்சாக நடிக்க செய்து, தனலட்சுமி வீட்டுக்கு சென்று உடல் நிலையை பரிசோதிப்பது போல் நடித்து குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்து விட வேண்டும் எனவும், அவ்வாறு செய்தால் தனக்கு வரும் சொத்தில் ஒரு பெரும் தொகையை தருவதாகவும் ஆசைவார்த்தை கூறியுள்ளார்.

இதற்கு உடன்பட்ட கோமதி ஏற்கனவே திட்டமிட்டபடி தமிழ்ச்செல்வியின் அம்மா பாப்பாத்தியுடன் காரில் சென்று குச்சிபாளையத்தில் இறங்கி தனலட்சுமி வீட்டை தேடி உள்ளார். வீடு அடையாளம் காணப்பட முடியாத நிலையில் அருகில் இருந்தவரிடம் விசாரித்த போது தனலட்சுமியின் பேத்தி கீர்த்தியை அடையாளம் காட்டியுள்ளனர்.

மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் வயதானவர்களை வீட்டுக்கே சென்று உடல்நிலை பரிசோதித்து மருந்து கொடுக்க வந்துள்ளதாகவும், தனலட்சுமிக்கு பரிசோதனை செய்ய வேண்டும் என கூறியதால் கீர்த்தி அவரை தனலட்சுமியின் வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளார்.

அங்கு பரிசோதிப்பது போல் நடித்து தனலட்சுமிக்கு ரத்த அழுத்தம் இருப்பதாகவும், அதனால் ஊக்க மருந்து தருகிறேன். இதை குடித்தால் சரியாகி விடும் என கூறி வீட்டில் இருந்த அனைவருக்கும் கோமதி குளிர்பானத்தை கொடுத்துள்ளார் .

ஏற்கனவே திட்டமிட்டு அடையாளம் செய்து வைத்திருந்த விஷம் கலந்த குளிர்பானத்தை தனலட்சுமிக்கு வழங்கியுள்ளார். இதனை குடித்த தனலட்சுமி கசப்பதாக கூறியதை அடுத்து அப்படித்தான் இருக்கும் என சமாதானப்படுத்திவிட்டு வேகமாக வந்த கோமதி, பாப்பாத்தி இருந்த காரில் ஏறி ஊருக்கு சென்று விட்டார்.

சற்று நேரத்தில் தனலட்சுமிக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதனால் கீர்த்தி அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக பாட்டி தனலட்சுமியை கீர்த்தி அழைத்து சென்று மருத்துவமனையில் சேர்த்து விட்டு கோமதியின் செல்போனுக்கு தொடர்பு கொண்டு நீங்கள் கொடுத்த குளிர்பானத்தை குடித்ததால் தனலட்சுமி மயக்கம் அடைந்து விட்டார் என கோமதியிடம் கூறியபோது சற்று நேரத்தில் சரியாகும் என கூறிய கோமதி போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டார்.

இதில் சந்தேகம் அடைந்த கீர்த்தி இது குறித்து திருச்செங்கோடு ஊரக போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன் பேரில் போலீசார் 'மக்களை தேடி மருத்துவ முகாமில்' கோமதி என்பவர் நியமிக்கப்பட்டுள்ளாரா?, அவர் குச்சிபாளையம் செல்ல பணிக்கப்பட்டாரா? என்பது குறித்து விசாரித்த போது அவ்வாறு ஒருவர் பணியில் இல்லை என்பதும், குச்சிபாளையத்துக்கு யாரும் அனுப்பப்படவில்லை என்பதும் தெரிய வந்தது.

இது குறித்து தீவிர விசாரணை நடத்திய போலீசார் போலி நர்சு கோமதியை பிடித்து விசாரித்த போது அவர் முழு உண்மைகளையும் போலீசாரிடம் தெரிவித்தார். தமிழ்செல்வியும், அவரது அம்மா பாப்பாத்தியும், திட்டமிட்டு கொடுத்தபடி பணத்துக்கு ஆசைப்பட்டு வெள்ளை கோர்ட்டு, பழைய ஐ.டி. கார்டு ஆகியவற்றை பயன்படுத்திக் கொண்டு நர்ஸ் போல நடித்து தனலட்சுமி வீட்டுக்கு சென்று அவருக்கு குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்தேன் என வாக்குமூலம் கொடுத்தார்.

இதன்பேரில் சொத்துக்கு ஆசைப்பட்டு மாமியாருக்கு விஷம் கொடுத்து கொலை செய்ய முயற்சி செய்த மருமகள் தமிழ்ச்செல்வி, அவரது தாயார் பாப்பாத்தி, அவருக்கு உடந்தையாக இருந்த கோமதி ஆகியோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதையடுத்து அவர்களை ஜெயிலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். அதன் பேரில் 3 பேரும் சேலம் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

Tags:    

Similar News