தி.மு.க. ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மனைவி வெட்டி படுகொலை
- பலத்த வெட்டு காயங்களுடன் திருப்பதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
- தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம், மேற்கத்தியனூர் அருகே உள்ள கோ.புளியம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் திருப்பதி (வயது 50).
தி.மு.க. நிர்வாகியான இவர் கோ.புளியம்பட்டி ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக உள்ளார். இவருடைய மனைவி வசந்தி (40). இவரது பிள்ளைகள் திருமணம் ஆகி தனியாக வசித்து வரும் நிலையில், திருப்பதி மற்றும் வசந்தி ஆகியோர் மட்டும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.
நேற்று இரவு வழக்கம் போல் வீட்டின் கதவை லேசாக சாத்திவிட்டு இருவரும் தூங்கினர்.
இன்று அதிகாலை 3 மணி அளவில் திருப்பதி வீட்டில் மர்ம கும்பல் புகுந்தனர். தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருப்பதி மற்றும் அவரது மனைவி ஆகிய 2 பேரையும் சரமாரியாக வெட்டினர். இதில் வலி தாங்க முடியாமல் 2 பேரும் கத்தி கூச்சலிட்டனர்.
அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இதனை பார்த்த கொலையாளிகள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகி விட்டனர்.
ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்த வசந்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த வெட்டு காயங்களுடன் திருப்பதி உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.
இதனை தொடர்ந்து அந்த பகுதி மக்கள் திருப்பதியை மீட்டு சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வசந்தி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் சம்பவ இடத்தில் சுமார் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணை குறித்து அவர்கள் கூறியதாவது:-
திருப்பதி வீட்டிற்கு முன்பு சுமார் 70 சென்ட் அளவிலான நிலம் உள்ளது. அந்த இடம் சம்பந்தமாக கடந்த 2 நாட்களாக பிரச்சனை இருந்து வந்துள்ளது.
இந்த நிலத்திலிருந்து தனக்கு 12 அடி அளவில் வழி வேண்டும் என்று திருப்பதி கேட்டு வந்தார்.
இன்று அந்த வழிக்கான பத்திர பதிவு நடக்க இருந்தது. இந்த நிலையில் இன்று மர்ம கும்பல் திருப்பதி மற்றும் அவருடைய மனைவி ஆகிய 2 பேரையும் திட்டமிட்டு வெட்டியுள்ள சம்பவம், அந்த நிலத்திற்கு சம்பந்தப்பட்டவர்கள் மீது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மனைவி வசந்தி நிலப் பிரச்சனை சம்பந்தமாக வெட்டி கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.