கடன் சுமையால் போலீஸ்காரர் தற்கொலை
- ரூ.18 லட்சம் கடன் பெற்று வீடு கட்டியுள்ளார்
- போலீசார் விசாரணை
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பசுமை நகர் பகுதியை சேர்ந்தவர் சென்னன் என்பவரின் மகன் இன்பராஜ் (வயது 33). இவர் திருப்பத்தூர் டவுன் போலீஸ் நிலையத்தில் முதல் நிலைக் காவலராக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தனியார் வங்கியில் வீடு கட்டுவதற்காக ரூ.18 லட்சம் கடன் பெற்று வீடு கட்டியுள்ளார். மேலும் அந்த வங்கிக் கடனை செலுத்தி வந்துள்ளார்.
கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கிருஷ்ணகிரி தனியார் வங்கியில் இருந்து திருப்பத்தூர் பகுதியில் உள்ள தேசிய மையமாக்கப்பட்ட வங்கிக்கு வீட்டு பத்திரத்தை மாற்றம் செய்து தனியார் வங்கி கடனை அடைத்துவிட்டு கூடுதலாக 6 லட்சம் வங்கி கடன் பெற்றுள்ளார்.
மேலும் இந்த வங்கி கடனை மாதம் தவணை முறையில் செலுத்தி வந்துள்ளார்.
இதனால் கடன் சுமை அதிகமாகி விட்டது என வீட்டில் அடிக்கடி கூறி மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து விட்டு மாலை வீட்டிற்கு வந்தவர் மன உளைச்சலில் இருந்துள்ளார்.
பின்னர் நேற்று மாலை வீட்டிலிருந்த அறையில் கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தார் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் இன்பராஜ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இவருக்கு திருமணமாகி கலை என்ற மனைவியும் விஷ்வா (வயது 8), பவின் (6) என்ற 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.
இதுகுறித்து தந்தை சென்னன் கொடுத்த புகாரின் பேரில் ஜோலார்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வங்கி கடன் பெற்று கடன் சுமை அதிகமானதால் மன உளைச்சலில் போலீஸ்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.