திருப்பூரில் வேன் மோதி கல்லூரி மாணவர் பலி - ஹெல்மெட் அணிந்தும் உயிரிழந்த பரிதாபம்
- கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலை ரோட்டை சேர்ந்த சையது இஸ்மாயில் மகன் ஆரியான்(வயது 20).
- திருப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு திரும்பி வந்தார்.
திருப்பூர் :
கோவை மாவட்டம், பொள்ளாச்சி, உடுமலை ரோட்டை சேர்ந்த சையது இஸ்மாயில் மகன் ஆரியான்(வயது 20). இவர் கோவை அவிநாசி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம்., மூன்றாம் ஆண்டு படித்துவந்தார்.சில நாட்கள் முன்பு, கர்நாடக மாநிலம், உடுப்பிக்கு குடும்பத்தினருடன் சுற்றுலா சென்றார்.
இவர் மட்டும், திருப்பூரில் உள்ள தனது சகோதரி வீட்டுக்கு திரும்பி வந்தார்.நேற்று காலை நண்பர் ஒருவரின் பைக்கை வாங்கி கொண்டு, பல்லடத்தில் உள்ள சித்தி வீட்டுக்கு புறப்பட்டார். குமார் நகர் சிக்னல் அருகே சென்ற போது, பின்னால் வந்த 'ஈச்சர்' சரக்கு வேன், பைக் மீது மோதியது.கீழே விழுந்த ஆரியான் மீது வேனின் பின்சக்கரம் ஏறியது. ஹெல்மெட் அணிந்திருந்தும் அது உடைந்து, தலைநசுங்கி உயிரிழந்தார். சரக்கு வேன், 20 மீட்டர் தூரத்திற்கு பைக்கை இழுத்து சென்றது.
திருப்பூர் வடக்கு போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வேன் டிரைவரை பிடித்து விசாரித்துவருகின்றனர்.சம்பவத்தை தொடர்ந்து, குமார் நகர் சிக்னல் அருகே சாலையின் இருபுறமும் வேகத்தை கட்டுப் படுத்த போலீசார் இரும்புத்தடுப்புகளை வைத்துள்ளனர்.