திருப்பூரில் காந்தி ஜெயந்தியன்று தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது நடவடிக்கை
- அந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
- அவ்வாறு இல்லையெனில், சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் காந்தி ஜெயந்தி தினத்தில் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காத 72 நிறுவனங்கள் மீது, தொழிலாளர் நலத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் அறிவுரைப்படியும், கோவை கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன் மற்றும் கோவை தொழிலாளர் இணை ஆணையர் லீலாவதி ஆகியோரின் வழிகாட்டுதலின்படியும், திருப்பூர் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) மலர்கொடி தலைமையிலும் திருப்பூர், காங்கயம், தாராபுரம் மற்றும் உடுமலை ஆகிய பகுதிகளிலுள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள், உணவு நிறுவனங்களில் தொழிலாளர் துணை மற்றும் உதவி ஆய்வாளர்கள் நேற்று ஆய்வு மேற்கொண்டனர். தேசிய விடுமுறை தினத்தில் தொழிலாளர்களை பணியமர்த்தினால்
அவர்களுக்கு இரட்டிப்பு சம்பளம் வழங்க வேண்டும். அவ்வாறு இல்லையெனில், சம்பளத்துடன் மாற்று விடுமுறை அளிக்க வேண்டும். இதுதொடர்பாக தொழிலாளர் துணை அல்லது உதவி ஆய்வாளர்க ளுக்கு முன்கூட்டியே விவரம் தெரிவிக்க வேண்டும். இந்நிலையில், கடைகள் மற்றும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், 72 நிறுவனங்கள் தொழிலாளர்களுக்கு விடுமுறை அளிக்காமல் பணியமர்த்தியது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அந்த நிறுவனங்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.