மக்காச்சோளத்தை அதிகம் தாக்கும் படைப்புழுவை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்
- இந்த புழு தாக்குதலால், மக்காச்சோளம் மட்டுமின்றி பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது.
- புழுவின் இறுதிப்பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப்புள்ளிகளும் தென்படும்.
உடுமலை:
படைப்புழு தாக்குதலால், மக்காச்சோளம் பாதிக்கப்படுவதை கட்டுப்படுத்த, பயிர் மேலாண்மை முறைகளை கடைப்பிடிக்க வேளாண்துறை அறிவுறுத்தியுள்ளது. படைப்புழு தாக்குதலால் மகசூல் 50 சதவீதத்துக்கும் மேல் குறையும் வாய்ப்புள்ளது. இந்த புழு தாக்குதலால், மக்காச்சோளம் மட்டுமின்றி பிற பயிர்களையும் பாதிக்கும் வாய்ப்புள்ளது. படைப்புழு ஆறு நிலைகளை கொண்டது. இளம்புழுப்பருவம் கருப்புத்தலையுடன் பச்சை நிறத்தில் காணப்படும். ஆறாம் நிலையில் உள்ள புழுவின் தலைப்பகுதியில் வெண்ணிறக்கோடுகளும், புழுவின் இறுதிப்பகுதியில் சதுர வடிவிலான நான்கு வெண்ணிறப்புள்ளிகளும் தென்படும்.புழுக்கள் வெயில் அதிகமாக இருக்கும் போது இலையின் அடிப்பகுதியில் சென்று மறைந்து கொண்டு பாதிப்பை உண்டாக்கும். தாய் அந்துப்பூச்சி தன் வாழ்நாளில் 1,500 முதல் 2,000 முட்டைகளை குவியலாக இடுகிறது. பெரும்பாலும் இலையின் அடிப்பகுதியில் இடும். முட்டையில் இருந்து வெளிவரும் புழுக்கள், இலையின் அடிப்பகுதியை சுரண்டி உட்கொள்ளும். இளம்புழுக்கள் நூலிழைகளை உருவாக்கி அதன் வாயிலாக காற்றின் திசையில் ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு செல்லும். இளம் செடிகளில் குருத்து மற்றும் முதிர்ந்த செடியில் கதிரின் நூலிழைகளையும், நடு மற்றும் காம்பு பகுதிகளையும் அதிகம் சேதப்படுத்தக்கூடியது. இரவு நேரங்களில் அதிகமாக சேதத்தை விளைவிக்கும்.
இதுகுறித்து வேளாண்மை உதவி இயக்குனர் நாக பசுபதி கூறியதாவது:-
படைப்புழுவினை கட்டுப்படுத்தும் முறைகளை விவசாயிகள் பின்பற்ற வேண்டும். உழவு செய்த பின், கடைசி உழவில், 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை ஒரு ஏக்கருக்கு இட வேண்டும். ஒரு கிலோ விதைக்கு 4 மி.லி., சையாண்டரினிலிபுரோல் - 19.8 மற்றும் தியோமெத்தாக்சம் - 19.8 மருந்துடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஊடு பயிர், வரப்புப் பயிராக தட்டை பயறு, எள், சூரியகாந்தி, துவரை பயறுகளை சாகுபடி செய்ய வேண்டும். தாய் அந்து பூச்சிகளை கண்காணித்து கட்டுப்படுத்த ஒரு ஏக்கருக்கு ஐந்து இனக்கவர்ச்சி பொறிகளை நிலத்தில் நிறுவ வேண்டும். பயிரின் 15 முதல் 20 நாட்கள் வளர்ச்சி நிலையில் குளோராண்ரடினிலிபுரோல் 18.5 எஸ்.சி., அல்லது புளுபெண்டமைட் 480 எஸ்.சி., பூச்சிக்கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம். பயிரின் 35 முதல் 45 நாட்கள் வளர்ச்சி நிலையில் மெட்டாரைசியும், அணி சோபிளே என்ற பூச்சிகளை தாக்கும் பூஞ்சையை ஏக்கருக்கு ஒரு கிலோ என்ற அளவில் பயன்படுத்த வேண்டும். பிறகு எமாமெட்டின் பென்சோயாட் அல்லது நல்லூரான் அல்லது ஸ்பைனிடோரம் போன்ற பூச்சிக்கொல்லி மருந்துகளை தேவைக்கு ஏற்ப பயன்படுத்தலாம்.காலை அல்லது மாலையில் மட்டும் ஒட்டு பசை கலந்து தெளிக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட அளவைவிட அதிகமாகவும், ஒரு முறை தெளித்த மருந்தை மறுமுறை பயன்படுத்தக்கூடாது. கைத்தெளிப்பான் அல்லது பேட்டரி கைத்தெளிப்பான்களை கொண்டு செடியின் குருத்து பகுதியில் நன்கு நனையும் படி தெளிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு உதவி வேளாண் அலுவலர்கள், தெற்கு வட்டார வேளாண் விரிவாக்க மையத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் கூறினார்.