போலீஸ் நிலையத்தில் பாதுகாப்பு கேட்டு 2 நாட்களில் 5 காதல் ஜோடிகள் தஞ்சம்
- அனைவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.
- 2 நாட்களில் 5 காதல்ஜோடிகள் தஞ்சமடைந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் கடந்த 2 நாட்களில் 5 காதல் ஜோடிகள் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். திருப்பூர் ஆத்துப்பாளையத்தை சேர்ந்த மஞ்சுளா-அஜித்குமார், உசிலம்பட்டி கீர்த்தனா-திருப்பூர் பார்த்தசாரதி, ஈரோடு புளியம்பட்டி தாஜிதா பானு- பாலகிருஷ்ணன், திருவண்ணாமலை அஸ்வினி- திருப்பூர் நெருப்பெரிச்சல் மணிகண்டன், திருப்பூர் அருள்ஜோதிபுரம் இளம்பெண்- வாலிபர் ஆகிய 5 காதல்ஜோடிகள் தஞ்சமடைந்தனர்.
இவர்கள் அனைவரும் திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர். அப்போது ஏற்பட்ட பழக்கம் மூலம் காதலிக்க தொடங்கினர். வீட்டில் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பதால் பொங்கல் விடுமுறையில் ஊருக்கு சென்று விட்டு வந்ததும், நண்பர்கள் உதவியுடன் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் பாதுகாப்பு கேட்டு திருப்பூர் வடக்கு மகளிர் போலீஸ் நிலையத்தில் தஞ்சமடைந்தனர். 2 நாட்களில் 5 காதல்ஜோடிகள் தஞ்சமடைந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். இதையடுத்து காதல்ஜோடிகளின் பெற்றோர்களை வரவழைத்து பேச்சு வார்த்தை நடத்தினர்.
அப்போது சில பெற்றோர்கள், காதல் திருமணம் வேண்டாம். எங்களுடன் வந்து விடு என்று கண்ணீர் விட்டு கதறி அழுது மகள்களை அழைத்தனர். ஆனால் அவர்கள் பிடிவாதமாக கரம்பிடித்த காதலன்களுடன்தான் செல்வோம் என்று கூறினர். இதனால் என்னசெய்வதென்று தெரியாமல் தவித்த பெற்றோர்கள் கடைசியில் காதல் திருமணத்தை ஏற்றுக்கொண்டதுடன், எந்தவித பிரச்சனையுமின்றி வாழுமாறு வாழ்த்தினர்.
ஒரு காதல் ஜோடியின் பெற்றோர் திருமணத்தை ஏற்க மறுத்தனர். அவர்கள் தனது மகளிடம், உன்னை நன்றாக படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினோம். நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க எண்ணினோம். ஆனால் இப்படி காதல் திருமணம் செய்து வந்து நிற்கிறாயே...எங்களுடன் வந்து விடு.. உனக்கு நல்ல மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்கிறோம் என்று கதறி அழுதனர்.
ஆனால் அவர்களது மகள் காதலனுடன்தான் செல்வேன் என்று கூறியதுடன்தான் அணிந்திருந்த நகைகளை கழற்றி பெற்றோரிடம் கொடுத்து விட்டு அங்கிருந்து காதலனுடன் சென்றார். அப்போது அவரது பெற்றோரின் பாசப்போராட்டம் நெஞ்சை உருக்குவதாக இருந்தது.