வேங்கைவயல் விவகாரம்- உயர்நீதிமன்றத்தில் வெளியான தகவல்
- முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
- சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் வேங்கை வயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கப்பட்ட சம்பவம் நடைபெற்று இரண்டு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.
இதுவரையில் 31 நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனையும் ஐந்து பேருக்கு குரல் மாதிரி பரிசோதனையும் சுமார் 300-க்கும் மேற்பட்ட நபர்களிடம் நேரடி சாட்சியங்களையும் சிபிசிஐடி போலீசார் பெற்றுள்ள நிலையில் இதுவரையில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை.
இந்த வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய மீண்டும் கால அவகாசம் கேட்டு புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நேற்று மனு தாக்கல் செய்திருந்தனர்.
இந்தநிலையில், இந்த வழக்கு உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி செந்தில்குமார், ராம மூர்த்தி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, வேங்கைவயலில் குடிநீர் தொட்டியில் மனிதக் கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில், முட்டுக்காடு ஊராட்சி தலைவரின் கணவரை பழிவாங்கும் நோக்கில் குடிநீரில் மனிதக் கழிவு கலப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. சுதர்சன், முத்துகிருஷ்ணன், முரளிராஜா ஆகியோர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
மனுதாரர் தரப்பில் ஆஜரான உச்சநீதிமன்ற தலைமை வழக்கறிஞர் ஜிஎஸ் மணி, இந்த சம்பவம் நடந்து 2 வருடம் ஆகியும் இது தொடர்பான எந்த குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்படவில்லை' என்று தெரிவித்தார்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்து விட்டது. சி.பி.சி.ஐ.டி. போலீஸ் விசாரணை முடிவடைந்து முரளிராஜா, சுதர்சன் மற்றும் முத்துகிருஷ்ணன் ஆகியோருக்கு எதிராக கடந்த ஜனவரி 20ஆம் தேதி புதுக்கோட்டை சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.