ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி மோசடி- ஜவுளிக்கடை உரிமையாளர் தலைமறைவு
- 70-க்கும் மேற்பட்டோர் கமலக் கண்ணன் மீது ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
- தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
அம்பத்தூர்:
அம்பத்தூரை அடுத்த புதூர் பஸ் நிறுத்தம் அருகே ஜவுளிக்கடை நடத்தி வந்தவர் கமலக் கண்ணன். இவர் ஏலச் சீட்டும் நடத்தி வந்தார். இதில் அம்பத்தூர், புதூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த சுமார் 500-க்கும் மேற்பட்டோர் பணம் கட்டி வந்தனர்.
ஆனால் பணம் கட்டி முடித்தவர்களுக்கு பணத்தை திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் பணம் கட்டி ஏமாந்தவர்கள் கமலக் கண்ணனுக்கு நெருக்கடி கொடுத்தனர். இதைத் தொடர்ந்து அவர் கடந்த மாதம் திடீரென தலைமறைவானார். இதனால் ஏலச் சீட்டுக்கு பணம் கட்டியவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் பணம் கட்டி ஏமாந்த சண்முகபுரத்தை சேர்ந்த அரசகுமார் உள்ளிட்ட சுமார் 70-க்கும் மேற்பட்டோர் கமலக் கண்ணன் மீது ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் செய்தனர்.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது கமலக்கண்ணன் ஏலச்சீட்டு நடத்தி ரூ.4 கோடி வரை மோசடியில் ஈடுபட்டு இருப்பது தெரிந்தது. தலைமறைவான அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.