கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வரத் துடிக்கிறார்- விஜய் மீது முதலமைச்சர் தாக்கு
- உண்மையிலேயே மக்களுக்காக தமிழுக்காக பாடுபடக் கூடியவர்களாக இருந்தால் அவர்களின் கட்சியின் பெயரை கூறலாம்.
- 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும்.
சென்னை:
நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 8 மாவட்டச் செயலாளர்கள் உள்பட சுமார் 2 ஆயிரம் பேர்களும், மாற்றுக் கட்சியில் இருந்து பலரும் ஆக மொத்தம் 3 ஆயிரம் பேர் இன்று அக்கட்சியில் இருந்து விலகி அண்ணா அறிவாலயம் சென்று தி.மு.க. தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
அவர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கறுப்பு-சிகப்பு துண்டு அணிவித்து வரவேற்றார். இவர்கள் தி.மு.க.வில் சேர்ந்ததற்காக கையெழுத்திட்ட உறுப்பினர் படிவம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் வழங்கப்பட்டது. தி.மு.க. இணைந்த நாம் தமிழர் கட்சியினர் முதலமைச்சருக்கு பெரியார் சிலையை அன்பளிப்பாக வழங்கினார்கள்.
இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:-
தி.மு.க. என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ல் தி.மு.க.வை அண்ணா உருவாக்கிய காலத்திலே அவர் சொன்னார். தி.மு.க. ஆட்சிக்காக மட்டுமல்ல, மக்களுக்கு பணியாற்ற வேண்டும். ஏழை எளியவர்களுக்கு தொண்டாற்ற வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட வேண்டும். ஒட்டுமொத்த தமிழகத்துக்காக உழைத்திட வேண்டும் என்ற உணர்வோடுதான் இந்த இயக்கம் தொடங்கப்படுகிறது என்று கூறினார்.
அதற்கு பிறகு படிப்படியாக கழகம் வளர்ந்து 57-ம் ஆண்டு தேர்தல் களத்துக்கு வந்தோம். ஆனால் இன்றைக்கு சில கட்சிகளை பார்க்கிறோம். தொடங்கிய உடனே ஆட்சிக்கு வருவோம் என்று சொல்லக்கூடிய நிலை இன்றைக்கு நாட்டில் இருந்து கொண்டிருக்கிறது.
நாங்கள்தான் அடுத்த ஆட்சி. நாங்கள்தான் அடுத்த முதலமைச்சர் என்று அனாதை நிலையில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள். நான் யார்? எப்படிப்பட்டவர்? எந்த கட்சி? எந்த கட்சி தலைவர்? என்றெல்லாம் சொல்ல விரும்பவில்லை. காரணம் அவர்களுக்கெல்லாம் நான் அடையாளம் காட்டுவதற்கு தயாராக இல்லை.
அவர்கள் பெயரை சொல்லி இந்த மேடைக்கு உரிய கவுரவத்தை நான் குறைத்துக் கொள்ள விரும்பவில்லை. அதுதான் உண்மை. மக்களுக்கு எதுவும் செய்யாமல் கட்சி தொடங்கியவுடன் ஆட்சிக்கு வர ஆசைப்படுகிறார்கள்.
நானாக இருந்தாலும், உதயநிதியாக இருந்தாலும் சரி என்ன சொன்னோம். மாற்றுக் கட்சி என்றுதான் சொன்னோம். அந்த கட்சியோட பெயரைக்கூட சொல்ல எங்கள் வாய் வரவில்லை.
உண்மையிலேயே மக்களுக்காக தமிழுக்காக பாடுபடக் கூடியவர்களாக இருந்தால் அவர்களின் கட்சியின் பெயரை கூறலாம். வேஷம் இட்டு நாடகத்தை நடத்திக் கொண்டிருக்க கூடியவர்களின் பெயரை அடையாளம் காட்ட நான் விரும்பவில்லை.
அண்ணா மறைவுக்கு பிறகு கருணாநிதி 5 முறை ஆட்சியில் இருந்தார். அதற்குப் பிறகு இந்த முத்து வேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களால் அடையாளம் காணப்பட்டு முதலமைச்சர் பதவிக்கு வந்திருக்கின்றேன்.
திராவிட மாடல் ஆட்சி என்றால் ஒரே ஒரு அடையாளம் தான் இங்கு கூடி இருக்கக்கூடிய நீங்கள் தான் அதற்கு அடையாளம். இது தான் திராவிட மாடல்... திராவிட மாடல் என்று கூறினாலே சிலருக்கு ஆவேசம் வந்து விடுகிறது.
கோபம் வரட்டும் ஆவேசம் வரட்டும் அப்படி வந்தால் தொடர்ந்து நாங்கள் திராவிட மாடல் என்று கூறிக் கொண்டே இருப்போம். அதற்கு பயந்து நாங்கள் மூலையில் போய் பயந்து விட மாட்டோம். நீங்கள் சொல்ல சொல்ல தான் தி.மு.க மேலும் வளர்ந்து கொண்டிருக்கிறது.
நீங்கள் தரகுறைவாக பேச பேச தான் உங்களிடம் இருந்து அனைவரும் இங்கு வந்து கொண்டிருக்கிறார்கள்.
ஆளுநர் தேவையில்லாத வேலை எல்லாம் செய்கிறார். நம்மை எதிர்த்து பேசிக்கொண்டு வருகிறார். திராவிடம் என்ற சொல்லுக்கு எதிராக பேசிக்கொண்டு வருகிறார்.
மதத்தை மையமாக வைத்துக்கொண்டு பேசி வருகிறார். என்றெல்லாம் வருத்தப்படுவதுண்டு ஆனால் பேசட்டும். அவர் பேச பேச தான் நமக்கு ஆதரவு அதிகமாகி கொண்டு இருக்கிறது.
இதுவரையிலும் சட்டமன்றத்தில் ஆளுநரை மாற்ற வேண்டும் என்று தீர்மானம் போட்டு இருக்கிறோமா?
அடுத்த முறையும் ஆளுநர் சட்டமன்றத்திற்கு வர வேண்டும். ஆளுநர் உரையை நாங்கள் கொடுப்போம் வாசிக்காமல் போகட்டும். மக்கள் அதை பார்க்கட்டும்.
பிரதமர் இடத்திலும் அமித்ஷாவிடத்திலும் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன் தயவு செய்து ஆளுநரை மாற்றாதீர்கள்.
கலைஞர் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் வழங்கி வருகிறோம்.
இந்தத் திட்டத்தில் ஆங்காங்கே குறை இருக்கிறது. அந்தக் குறையும் தீர்க்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி சட்டமன்றத்தில் உறுதி கொடுத்திருக்கிறார்.
நீங்கள் யாரை நம்பி சென்று அந்த நம்பிக்கை வீணாய் போனது என்று இங்கு வந்திருக்கிறீர்களோ அவர்கள் இன்னும் பேசட்டும்.
தொடர்ந்து பேசிக்கொண்டே இருந்ததால் மக்கள் தெளிவாக புரிந்து கொள்வார்கள். எதைப் பற்றியும் கவலைப்பட தேவையில்லை.
தமிழ் மக்களுக்காகவும், தமிழ்நாட்டிற்காகவும் உழைக்கும் இயக்கம் தி.மு.க. பவள விழா கண்ட இயக்கம் தி.மு.க. மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை தி.மு.க. அரசு நிறைவேற்றி வருகிறது. 7-வது முறையாக தி.மு.க. நிச்சயம் ஆட்சி அமைக்கும். தி.மு.க. அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயன் பெற்று வருகிறது. தி.மு.க. அரசின் சாதனைகளை தமிழக மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். அதற்காக உழைப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் பொதுச் செயலாளர் துரைமுருகன், அமைச்சர் அன்பில் மகேஷ், தி.மு.க. செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ்.இளங்கோவன், மாவட்ட கழக செயலாளர் நே.சிற்றரசு, ராஜீவ்காந்தி உள்பட பலர் பங்கேற்றனர்.