பல்லடம் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் சாலையில் இறக்கி விடப்படும் பயணிகள்
- தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
- பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர்.
பல்லடம், ஆக.22-
பல்லடம் பஸ் நிலையத்தில் கோவை, திருச்சி, உடுமலை, பொள்ளாச்சி, மதுரை, போன்ற ஊர்களுக்குச் செல்ல தினமும் சுமார் 500-க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. தினமும் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கல்வி, வேலை, உள்ளிட்ட பணிகளுக்காக பஸ் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர்.
இந்த நிலையில் இரவு மற்றும் காலை நேரங்களில் பஸ் நிலையத்திற்குள் செல்லாமல் பஸ் நிலையத்தின் முன்பு ரோட்டில் இறக்கி விடப்படுவதால் பயணிகள் அவதிபடுகின்றனர். இதனால் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். இது குறித்து பயணிகள் கூறியதாவது:- இரவு மற்றும் காலை நேரங்களில், திருச்சி, மதுரை போன்ற வெளியூர் செல்லும் பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வருவதில்லை.
பஸ் நிலையம் முன்புள்ள தேசிய நெடுஞ்சாலையிலேயே நிறுத்தி பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விடுகின்றனர். இது ஒரு புறம் பயணிகளுக்கு வீண் அலைச்சலை ஏற்படுத்துகிறது. மேலும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். தேசிய நெடுஞ்சாலையில் அதிக வாகன போக்குவரத்து உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயமும் உள்ளது.
எனவே அனைத்து பஸ்களும் பஸ் நிலையத்திற்குள் வந்து செல்வதற்கு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பயணிகள் தெரிவித்தனர்.