உள்ளூர் செய்திகள்

கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்ற காட்சி.

கள்ளச்சாராயம், போதைப்பொருட்களை ஒழிக்க போலீசார் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட வேண்டும் - கலெக்டர் அறிவுறுத்தல்

Published On 2023-06-20 13:26 IST   |   Update On 2023-06-20 13:26:00 IST
  • துறை சார்ந்த அலுவலர்களுடன் வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
  • போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், சமுதாய சீர்கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

திருப்பூர் :

திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான வாராந்திரஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.இந்த ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் கிறிஸ்துராஜ் பேசியதாவது:- தமிழ்நாடு முதலமைச்சர் போதைபொருட்களின் நடமாட்டத்தையும், பயன்பாட்டையும் முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு தொடர்பான துறை சார்ந்தஅலுவலர்களுடன் வாராந்திர ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.

திருப்பூர் மாவட்டத்தில் போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஒழிப்பு குறித்து தொடர்ந்து காவல்துறை தீவிர கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.போதைப்பொருள் மற்றும் கள்ளச்சாராயம் தொடர்பாக புகார்கள் வரும்போது உடனடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருட்களால் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு மறுவாழ்வுமையத்திற்கு அனுப்பி வைக்கவேண்டும். அனுமதியற்ற மதுபானகூடங்கள் குறித்து தொடர்ந்து தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும். வருகின்ற ஜுன் 26 போதைப்பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு போதைப்பொருள் ஒழிப்பு குறித்தும், சமுதாய சீர்கேடுகள் குறித்தும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.

அதிக மக்கள் கூடும் இடங்களான பேருந்து நிலையம், ெரயில் நிலையம், காய்கறிச்சந்தை மற்றும் வணிக வளாகங்கள் உள்ளிட்ட இடங்களில் போதைப்பொருட்கள் விழிப்புணர்வு குறித்த சுவரொட்டிகள், ஒட்டுவில்லைகள் மூலம்பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை சென்றடையும் வகையில் போதை பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் மற்றும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட வேண்டும்.காவல்துறை, கலால்துறை இணைந்து கூட்டாய்வு மேற்கொண்டு அனுமதியற்ற மதுபானக்கூடங்கள் மற்றும் போதைபொருள் இல்லாத நிலைக்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாமிநாதன் , மாநகர காவல் உதவி ஆணையர் (நுண்ணறிவு பிரிவு) ஈஸ்வரன்,உதவி ஆணையாளர் (கலால்) ராம்குமார், வடிப்பக அலுவலர் துரை, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) விஜயராஜ் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.  

Tags:    

Similar News