கோப்புபடம்
உடுமலை வழியாக இயக்கப்பட்ட பாலக்காடு-திண்டுக்கல் ரெயிலை மீண்டும் இயக்க திட்டம்
- தண்டவாளத்தை பலப்படுத்துவது, ஜல்லிக்கற்கள் கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது.
- ரெயில்களின் வேகம் மணிக்கு குறைந்தது 60 முதல் அதிகபட்சம் 80கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.
உடுமலை:
கேரளா, தமிழகத்தை இணைக்கும் முக்கிய ரெயில் வழித்தடமாக பொள்ளாச்சி - பாலக்காடு வழித்தடம் உள்ளது.இந்த வழித்தடத்தில் மீட்டர்கேஜ் காலத்தில், பாலக்காட்டில் இருந்து மதுரை வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டது. திண்டுக்கல் - மதுரை அகல ரெயில்பாதையாக மாற்றப்பட்ட பின், இந்த ரெயில் பாலக்காடு - திண்டுக்கல் ரெயிலாக மாற்றப்பட்டது. தொடர்ந்து பாலக்காடு - திண்டுக்கல் அகல ரெயில்பாதை பணி, 2008ல் துவங்கிய போது இந்த ரெயில் சேவையும் நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர், ரெயில்வே ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் உட்பட பல்வேறு தரப்பினர் இந்த ெரயிலை மீண்டும் இயக்க கோரிக்கை விடுத்து வந்தனர். மேலும் கொரோனாவுக்கு முன் கோவை - பொள்ளாச்சி இடையே அதிகாலை மற்றும் இரவு நேரங்களில் இயக்கப்பட்ட பயணிகள் ரெயிலை இயக்கவும், பாலக்காடு ரெயில்வே கோட்ட நிர்வாகம் ெரயில்வே வாரியத்துக்கு பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து ரெயில்வே ஆர்வலர்கள் கூறியதாவது:-
பாலக்காடு - திண்டுக்கல் ரெயில், பழநி, உடுமலை, பொள்ளாச்சி மற்றும் கோவை மாவட்ட மக்கள், தென் மாவட்டங்களுக்கு எளிதில் சென்று வர ஏதுவாக இருந்தது. இந்த ரெயில் நிறுத்தப்பட்டதால், கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட மக்களுக்கு வணிக ரீதியான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது, இந்த ரெயிலை இயக்க பரிந்துரை செய்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரெயிலை திருச்சி வரை நீட்டிக்கவும், நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வேகம் அதிகரிப்பு
மதுரை கோட்டத்துக்கு உட்பட்ட பழனியில் இருந்து 65 கி.மீ., தொலைவில் பாலக்காடு கோட்டத்துக்கு உட்பட்ட பொள்ளாச்சி அமைந்துள்ளது.
இந்த வழித்தடம் தமிழகத்தின் தென் மாவட்டங்கள், கேரள மாநிலம் மற்றும் கோவை உள்ளிட்ட தமிழக மேற்கு மாவட்டங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாகும். இந்த வழித்தடத்தில் திருவனந்தபுரம் - மதுரை அமிர்தா விரைவு ரெயில், கோவை -மதுரை, சென்னை -பாலக்காடு, பாலக்காடு -திருச்செந்தூர் ஆகிய ெரயில்கள் இயக்கப்படுகின்றன. தற்போது பொள்ளாச்சியில் இருந்து திண்டுக்கல்வரையிலான வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் மணிக்கு குறைந்தது 60 முதல் அதிகபட்சம் 80கி.மீ., வேகத்தில் இயக்கப்படுகிறது.
இதை 110 கி.மீ., ஆக அதிகரிக்க தெற்கு ரயில்வே முடிவு செய்துள்ளது.இதற்காக தண்டவாளத்தை பலப்படுத்துவது, ஜல்லிக்கற்கள் கொட்டுவது உள்ளிட்ட பல்வேறு பணிகள் அடுத்தாண்டு மார்ச் மாதத்துக்குள் நிறைவு செய்யப்பட உள்ளது.அதன்பின் ரெயில்களின் நேர அட்டவணையை மாற்றி ரெயில்களின் வேகத்தை படிப்படியாக அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெற்கு ெரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொள்ளாச்சி- திண்டுக்கல் வழித்தடத்தில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டால் 2மார்க்கங்களிலும் பயண நேரம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொரோனா காரணமாக நிறுத்தப்பட்ட சேலம்-கோவை மெமு ெரயில் இயக்கம், இரண்டரை ஆண்டுகளுக்கு பின் கடந்த ஜூலை 11ந் தேதி தொடங்கப்பட்டது. இரண்டு நாள் ரெயில் இயங்கிய நிலையில் காவேரி-ஆனங்கூர் இடையே பராமரிப்பு பணி காரணமாக ஜூலை 14 முதல் 24-ந்தேதி வரை, 10 நாட்களுக்கு ரெயில் இயக்கம் ரத்து செய்யப்பட்டது.
ஆகஸ்டு-செப்டம்பர் மாதம் ரெயில் இயங்கியது. அக்டோபர் 13 முதல் 30-ந்தேதி வரை இரண்டாவது முறையாக ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டது. நவம்பர் முதல் மீண்டும் ரெயில் இயங்குமென எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காவேரி-ஈரோடு இடையே பொறியியல் பணியால் அக்டோபர் 31 முதல் நவம்பர் 29-ந்தேதி வரை 30 நாட்களுக்கு 3-வது முறையாக இந்த ரெயில் ரத்து செய்யப்பட்டது.
டிசம்பர் முதலாவது ரெயில் இயங்குமென சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை மாவட்ட பயணிகள் காத்திருந்தனர். ஆனால் சேலம் யார்டில் பணிகள் நடப்பதாக கூறி டிசம்பர் 1, 2 மற்றும், 3-ந் தேதிகளில் என 4-வது முறையாக கோவை-சேலம் மெமு ரெயில் ரத்து செய்யப்பட்டுள்ளது பயணிகளிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.