அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பயனாளிகள் தேர்வு
- திருமுருகன்பூண்டியில் 224 வீடுகள் கட்டும் பணி முழுமைப்பெறும் நிலையில் உள்ளது.
- மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது.
அவிநாசி :
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அவிநாசி, சூளையில் 448 வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இங்கு பயனாளிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டு பலரும் குடியேறிவிட்டனர்.
திருமுருகன்பூண்டியில் 224 வீடுகள் கட்டும் பணி முழுமைப்பெறும் நிலையில் உள்ளது.இக்குடியிருப்புகளுக்கான பயனாளிகள் பட்டியல் தயார் நிலையில் உள்ளது.இருப்பினும் அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் பெற்றுத்தருவதாக கூறி சில அரசியல் கட்சியினர், தனி நபர்கள் சிலர் மக்களிடம் இருந்து பணம் வசூலிப்பதாக புகார் எழுந்து வருகிறது.
இதுகுறித்து மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில், பூண்டியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில், நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் வைக்கப்பட்டுள்ள பேனரில் ,வீரபாண்டி, திருக்குமரன் நகர், பாரதி நகர், ஜெயா நகர், பூண்டி, அவிநாசியில் கட்டப்பட்டுள்ள மொத்தம் 3,744 வீடுகளுக்கும், மாவட்ட கலெக்டர் மற்றும் வாரியத்தின் ஒப்புதலுடன், பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர்.புதிதாக மனுக்கள் எதுவும் பெறப்படாது என்ற அறிவிப்பு இடம் பெற்றுள்ளது.அவிநாசி சூளையில் அடுக்குமாடி குயிருப்பு உள்ள இடத்துக்கு, சோலை நகர் எனவும், திருமுருகன்பூண்டியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ள இடத்துக்கு, பூண்டி நகர் எனவும் நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தினர் பெயர் சூட்டியுள்ளனர்.