திருநாவலூர் அருகே ஆடு திருடிய திருவாரூர் மாவட்ட வாலிபர் கைது
- இவர் பலரிடம் ஆடுகளை ஓப்படைத்து மேய்ச்சலுக்கு அனுப்பி வைப்பார்.
- இது குறித்து கேள்வி கேட்ட ஓடையாருக்கு, கருணைகுமார் சரியாக பதில் கூறவில்லை
கள்ளக்குறிச்சி:
திருநெல்வேலி மாவட்டம் இளையான்குடி அருகில் உள்ள பிரம்மச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ஒடையார் (வயது 53). செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். இவர் பலரிடம் ஆடுகளை ஓப்படைத்து மேய்ச்சலுக்கு அனுப்பி வைப்பார். அதற்கு அவர்களுக்கு கூலிப் பணம் கொடுத்துவிடுவார். இவர் திருவாரூர் மாவட்டம் கிடார் கிராமத்தை சேர்ந்த கருணைகுமார் (23) என்பவரிடம் 200 ஆடுகளை ஓப்படைத்து மேய்ச்ச லுக்காக கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு அனுப்பி வைத்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டைக்கு வந்த ஆட்டின் உரிமையாளர் ஒடையார், கருணை குமாரை தொடர்பு கொண்டு ஆடுகள் எங்குள்ளன என்று கேட்டார்.
உளுந்தூர்பேட்டை அருகேயுள்ள சேந்தநத்தத்தில் பட்டி போட்டு ஆடுகளை மேய்த்து வருவதாக கருணைகுமார் கூறியுள்ளார். அங்கு சென்ற ஒடையார், ஆடுகளை எண்ணிப்பார்த்தார். 10 ஆடுகள் குறைவாக இருந்தது. இது குறித்து கேள்வி கேட்ட ஓடையாருக்கு, கருணைகுமார் சரியாக பதில் கூறவில்லை. இது குறித்து திருநாவலூர் போலீசாரிடம் ஆட்டின் உரிமையாளர் ஒடையார் புகார் கொடுத்தார். அதன்பேரில் கருணை குமாரை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். இதில் கருணைகுமாரும், ராமநாதபுரம் மாவட்டம் சந்திரகுடியை சேர்ந்த கலைச்செல்வனும் ஆடுகளை திருடி விற்றது தெரியவந்தது. இதையடுத்து வழக்கு பதிவு செய்த போலீசார், கருணைகுமாரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும், தலைமறைவாகவுள்ள கலைச்செல்வனை போலீசார் தேடி வருகின்றனர்.