தமிழகத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியால் நஷ்டத்தில் தென்னை விவசாயிகள்
- தேங்காய் தினம் கொண்டாடும் அதே வேளையில், தேங்காயின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
- கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டேரில் 1.5 கோடி தென்னை மரங்கள் உள்ளன.
பொள்ளாச்சி:
இன்று உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. தேங்காய் தினம் கொண்டாடும் அதே வேளையில், தேங்காயின் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. குறிப்பாக தேங்காய் விலை ரூ.10-க்கும் குறைவாக கொள்முதல் செய்யப்படுவதால் விவசாயிகளிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் 4 லட்சம் ஹெக்டேரில் 12 கோடி தென்னை மரங்கள் உள்ளன. அதில் குறிப்பாக கோவை, திருப்பூர் மாவட்டத்தில் 82 ஆயிரம் ஹெக்டேரில் 1.5 கோடி தென்னை மரங்கள் உள்ளன.
தமிழகத்தில் தென்னை மரங்கள் அதிக அளவில் இருந்தாலும் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் உள்ள தென்னை மரங்களின் தேங்காய்க்களுக்கு அதிக வரவேற்பு உள்ளது. தென்னை மரங்கள் நீண்ட கால பயிராகும். வெள்ளை ஈ தாக்குதல், காண்டாமிருக வண்டு தாக்குதல், வாடல் நோய் என பல்வேறு நோய் தாக்குதல்களால் தென்னை விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
இப்படி பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே தென்னை மரங்களில் விளையும் தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை என்பது விவசாயிகளின் மிகப்பெரிய குறையாக இருந்துவருகிறது.
தேங்காய் விலை சரிவை தடுக்க தேங்காய் கொப்பரைக்கு மத்திய, மாநில அரசுகள் ஆதரவு விலையாக ரூ.105.90 நிர்ணயித்துள்ளது. இருந்தபோதும், தற்போது தமிழகத்தில் கொள்முதல் முறையாக நடைபெறுவதில்லை என்பது விவசாயிகளின் புகாராக உள்ளது.
இதனால்,கோவை, திருப்பூர் மாவட்டங்களில் தற்போது தேங்காய் ஒன்று ரூ.10 கீழ் கொள்முதல் செய்யப்படுகிறது. கொப்பரை கிலோ ஒன்றுக்கு ரூ.80க்கும் கீழ் விற்பனையாவதால் விவசாயிகள் கடுமையான பாதிப்பு அடைந்துள்ளனர்.
கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை மிகவும் சரிந்து விற்பனையாகிவருகிறது. இதனால், தென்னை விவசாயிகள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
இதையடுத்து, எம்எல்ஏக்கள் பொள்ளாச்சி வி.ஜெயராமன், வானதி சீனிவாசன், அமுல்கந்தசாமி ஆகியோர் சமீபத்தில் டெல்லியில் மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங்தோமரை சந்தித்து மனு அளித்தனர்.
அரசு ஆதார விலையை ரூ.150 உயர்த்தி கொள்முதல் செய்தால் மட்டுமே வெளிமார்க்கெட்டில் தேங்காய் விலை சரிவது தடுக்கப்படும். இன்று உலக தேங்காய் தினத்தில் மத்திய, மாநில அரசுகள் தென்னை விவசாயிகள் தங்கள் வாழ்வாதாரத்தை காக்க ஆதார விலையை ரூ.150 ஆக உயர்த்தவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், தென்னை நீண்ட கால பயிர். தண்ணீர் பற்றாக்குறை, பல்வேறு நோய்தாக்குதல்களுக்கு இடையே தென்னை மரங்களை காப்பாற்றுவது என்பது மிகப்பெரிய சவாலாக இருந்துவருகிறது.
இப்படி பாதுகாத்து வளர்க்கும் தென்னை மரத்தில் இருந்து கிடைக்கும் தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைப்பதில்லை. ஆகவே தேங்காய்க்கு கட்டுபடியான விலை கிடைக்கவும், விலை சரிவை தடுக்கவும் கிலோ ஒன்றுக்கு ரூ.150 ஆதார விலை நிர்ணயித்து கொள்முதல் செய்யவேண்டும் என்றனர்.