உள்ளூர் செய்திகள்

குற்றாலம் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை

Published On 2024-12-31 09:02 GMT   |   Update On 2024-12-31 09:02 GMT
  • மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.
  • சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

தென்காசி:

தென்காசி மாவட்டத்தில் கடந்த ஒரு வார காலத்திற்கு மேலாக கடுமையான வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் நேற்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மதியத்திற்கு மேல் தென்காசி மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மிதமான மழை பெய்தது.

இதனால் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. மேலும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் தொடர்ந்து மிதமான மழை பெய்ததன் காரணமாக குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்டது.

மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் இரவிலும் வனப்பகுதியில் மழை பெய்ததால் மெயின் அருவியில் தண்ணீர் பாதுகாப்பு வளைவைத் தாண்டி ஆர்ப்பரித்து கொட்டியது.

இதனால் பாதுகாப்பு கருதி இன்று காலையில் மெயின் அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டது. மெயின் அருவியில் குளிப்பதற்கு வந்த சுற்றுலா பயணிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்தனர்.

மேலும் இன்று காலையில் வானம் மேகமூட்டத்துடன் மிதமான சாரல் மழை விட்டு விட்டு பெய்து வருவதால் குற்றால அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரிக்க கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் மெயின் அருவி பகுதியில் பாதுகாப்பு பணிக்கு போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

பழைய குற்றால அருவி பகுதியை சுற்றி சேதம் அடைந்த பாதுகாப்பு கம்பிகள் அனைத்தும் மீண்டும் அமைப்பதற்கான பணியில் ஊழியர்கள் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News