யார் அந்த சார்? - இ.பி.எஸ்.-ஐ எச்சரிக்கும் அமைச்சர் சேகர்பாபு
- போராட்டத்தால் தினந்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.
- சென்னையில் பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது.
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பொள்ளாச்சி வன்முறையில் ஈடுபட்ட அந்த சார் யார் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை.
அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவத்தில் கோட்டூர்புரத்தைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவர் போலீசார் கைது செய்யப்பட்டுள்ளார். குற்றவாளி நீதி முன்பு நிறுத்தப்பட்டு தண்டிக்கப்படுவார்.
நீதிமன்றம் அளித்த நேற்றைய தீர்ப்பு வரவேற்கத்தக்கது. அனைவரும் இந்த பிரச்சனையை ஊதி ஊதி பெரிதாக்குகிறார்கள் என்பதை அனைத்து மக்கள் மனதிலும் கல்வெட்டாக பதிந்து விட்டது.
இதோடு எடப்பாடி பழனிசாமி நிறுத்திக்கொண்டால் நன்றாக இருக்கும். இல்லையென்றால் அவரை நோக்கி மக்கள் போராடுகின்ற சூழல் உண்டாகி விடும் என்பதை எச்சரிக்கையாக தெரிவித்துக்கொள்கிறேன்.
நேற்றைக்கு நீதிமன்றம் அளித்த தீர்ப்பை டவுன்லோடு செய்து அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் அனுப்புகின்றோம்.
போராட்டம் என்பது எந்த போராட்டமாக இருந்தாலும் போராட்டத்தை நோக்கிய கவனத்தையும் அரசின் கவனத்தையும் ஈர்ப்பதுதான் நோக்கமாக இருக்க வேண்டும்.
இவர்கள் கையில் எடுத்து இருக்கும் போராட்டத்தில் குற்றவாளி கைது செய்யப்பட்டு இருக்கிறார். கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் உடனடியாக ஜாமினில் வெளி வரமுடியாத அளவிற்கு கடுமையான குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு பயன்படுத்தும் சட்டத்தை பயன்படுத்தி கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
நாள்தோறும் போராட்டம் போராட்டம் என்று வீதிக்கு வரும்போது தங்களுடைய சுய விளம்பரத்திற்காக அப்படி செய்யும் போராட்டத்தால் பாதிக்கப்படக்கூடிய மக்களை சிந்தித்து பார்க்க வேண்டும்.
தினந்தோறும் போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது. பள்ளி மற்றும் பணிக்கு செல்வபவர்கள் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. பேருந்து, ரெயில், விமானத்திற்கு செல்பவர்களும் நேரத்திற்கு செல்ல முடியவில்லை. மருத்துவ சிகிச்சை தேவைப்படுவோர் நேரத்திற்கு செல்ல முடியாமல் அல்லல்படுகின்றனர். அதேநேரம், போராட்டத்தில் ஈடுபடுவோரை அப்புறப்படுத்தி, கைது செய்து, விடுவித்து விடுகிறார்கள். இதில், எந்தவிதமான அடக்குமுறையும் இல்லை.
இந்த ஆர்ப்பாட்டம் போராட்டத்தால் யாராவது இதுவரையில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று இருக்கிறார்களா? எப்படி அடக்குமுறை என்று சொல்ல முடியும்.
போராட்டக்காரர்கள் மக்களுடைய தேவைகளையும் உணர வேண்டும். ஏற்கனவே சென்னையில் பல இடங்களில் மெட்ரோ பணிகள் நடைபெற்று வருகிறது. பல இடங்களில் மழைநீர் வடிகால் பணிகள் நடைபெற்று வருகின்றன.
சென்னையில் அதிகப்படியான வளர்ச்சி திட்டங்களுக்கு வித்திட்டு அந்த பணிகள் நடைபெற்று கொண்டிருக்கின்றன.
இந்தநிலையில் இவர்கள் ஒரு செயற்கையான நெருக்கடியை உருவாக்குகின்றபோது அதை முழுவதுமாக கவனித்து அதற்குண்டான வழிவகைகளை கண்டறிந்து, மக்களுக்கு சுகமான பயணத்தை அளிப்பது அரசின் கடமை என்பதால் தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
யாரையும் ஒடுக்குகின்ற அரசு அல்ல. மன்னிப்போம் மறப்போம் என்ற அரசே இந்த அரசு என்பதை தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறினார்.